பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/684

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

674 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(க.) யாதாமோர் உதவியும் இல்லாதவனென்று அவனுக்குத் தீங்கிழைப்பதாயின் இவனுக்குள்ள உதவிகள் யாவும் இல்லாமல் தானே விலகிப்போம் என்பது கருத்து.

(வி.) ஒருவனுக்கு சுற்றத்தோர் உதவியும் இல்லை பொருளுதவியும் இல்லை என்றறிந்து அவனைக் கெடுக்குந் தீயச் செயல்களைச் செய்துக் கெடுப்பதாயின் இவனுக்குள்ள மக்களுதவியும் பொருளுதவியும் இவனை அறியாது ஒழிந்து பெருந் துக்கத்திற்கு ஆளாக்கிவிடும் என்பது விரிவு.

6.தீப்பாலதான் பிறர்கட் செய்யற்க நோய்ப்பால
தன்னையடல் வேண்டா தான்.

(ப.) நோய்ப்பால - பிணியினது தோற்றம், தன்னையடல் - தன்னைச்சேரல், வேண்டாதான் - வெறுப்புற்றவன், தான்பிறர்கட் - தான் மற்றவர்கட்கு, தீப்பால - கொடிய துன்பத் தோன்றாவண்ணம், செய்யற்க - ஒழுகல்வேண்டுமென்பது பதம்.

(பொ.) பிணியினது தோற்றம் தன்னைச்சேர வெறுப்புற்றவன் தான் மற்றவர்கட்குக் கொடிய துன்பந் தோற்றாவண்ணம் ஒழுகல்வேண்டும் என்பது பொழிப்பு.

(க.) தனக்கோர் துன்பமும் அணுகாதிருக்க வேண்டுகின்றவன் பிறருக்கோர் துன்பத்தையும் விளைவிக்காது தன்னைக் காத்துக்கொள்ளல் வேண்டும் என்பது கருத்து.

(வி.) கொடிய துன்பங்களாஞ் செயல்களும் பிணிகளுந் தனக்கு அணுகலாகாதென விரும்புகிறவன் தன்னால் மற்றவர்களுக்குத் துன்பச் செயல்களும் பிணியின் உபத்திரவமும் அணுகாது செய்துக்கொள்ள வேண்டும் என்பது விரிவு.

7.எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை
வீயாது பின்சென் றடும்.

(ப.) யுற்றாரு - தனதுரவின்முறையாரிடத்து, எனைப்பகை - எவ்வளவு விரோதந் தோன்றினும், முய்வர் - அங்கனே யடங்கிவிடுவார்கள், வினைப்பகை - தான் செய்யுங் கொடிய துன்பவிரோதமானது, வீயாது - அடங்காது, பின்சென்றடும் பிறவிகடோருந் தொடர்ந்தேவருமென்பது பதம்.

(பொ.) தனது உரவின் முறையோரிடத்து எவ்வளவு விரோதந் தோன்றினும் அங்கனே அடங்கிவிடுவார்கள். தான் செய்யுங் கொடிய விரோதத்துன்பமானது பிறவிகடோருந் தொடர்ந்தே வரும் என்பது பொழிப்பு.

(க.) தனது குடும்பத்துள் எத்தகைய விரோதமுண்டாயினுங் கூடிய சீக்கிரம் அங்கனே அடங்கிப்போகும். தான்செய்தக் கொடிய துன்பத்துக்குள்ளாய விரோதவினையாயது மாறாப் பிறவிகடோருந் தொடர்ந்தே வரும் என்பது கருத்து.

(வி.) குடும்பத்தோருக்குள் தோன்றுங் கொடிய விரோதமாயினும் நாளுக்கு நாளகன்று அடங்கிப்போய்விடும். தான் அன்னியருக்குச் செய்யுங் கொடிய துன்பங்களும் பகைகளும் மாறாப்பிறவிகடோருந் தீராப்பகையையும் துன்பத்தையுங் கொடுத்துக்கொண்டேவரும் என்பவற்றிற்குச் சார்பாய் சீவகசிந்தாமணி "அல்லித்தாளற்றபோது மாறாத நூலதனைப்போலத், தொல்லைத் தன்னுடம்பு நீங்கத்தீவினை தொடர்ந்து நீங்கா, புல்லிக்கொண்டு இரைச்சூழ்ந்து புக்குழிபுக்குப்பின்னின், றெல்லையிறுன்பவெந்தீச் சுட்டெரித் திடுங்களன்றே" என்பது கொண்டே தீவினைக்கு அஞ்சி நடந்துக் கொள்ளுங்கோள் என்பது விரிவு.

8.தீயவைச் செய்தார் கெடுத னிழறன்னை
வீயா தடியுரைந் தற்று.

(ப.) தீயவை - கொடிய துன்பங்களை, செய்தார் - செய்வோர்களுக்கு, கெடுத - கேடானது, னிழறன்னை - தன்னுடைய நிழல், வீயா - அகலாது,