பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/686

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

676 / அயோத்திதாசர் சிந்தனைகள்

பயன்றெரிபுலவ, ரித்திரம்படார்படர்குவராயின், விலங்கும் பேயும் நரகருமாகிக் கலங்கிய உள்ளக் கவலையிற்றோன்றுவர்” என்பது கொண்டு இல்லறத்தோன் தீவினைக்கு அஞ்சி ஒழுகல் வேண்டும் என்பதை விளங்கக்கூறிய விரிவு.

கனந்தங்கிய எலீஸ் துரையவர்கள் சங்கத்திலேயே முதலாவது அச்சிட்டக்குறளில் “அருங்கேடனென்ப தறிக” வென்பது பிழைப்பட்டுள்ளது கொண்டே உரையெழுதி யோர்காலத்தும் பிழைபட்டு பொருள்கெட்டும் வழங்கிவருகின்றது. அதன் திருத்தமொழியை அருங்கலைச் செப்பாலறிந்துக் கொள்ளலாம். வீடுபேறு "அருங்கோடர் சங்கமணுகி யறவுரைகேட் டிருமாந்திருப்பதேவீடு”.

27. ஒப்புர ஒழுகல்

உலகத்தில் வாழும் மக்கள் தங்கள் யதார்த்த உரவினரோடு கூடிவாழ்தல் இயல்பாதலின் மற்றுந் தங்களையொத்த மக்களென ஒப்பி உரவாடும் பல்லோருக்கும் இட்டுண்டு வாழ்வதே இல்லறப்பேறாய ஒழுக்கமாதலின் பிரிதிபயனைக் கருதாது பெய்யும் வானின் உபகாரத்தை விளக்கி ஒப்புரவொழுகலின் சுகத்தையும் அதன்பயனையும் விளக்குகின்றார்.

1.கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ வுலகு.

(ப.) கைம்மாறு - ஏதொரு பிரிதி யுபகாரமும், வேண்டா - விரும்பாது, கடப்பாடு - முடிவின்றி பெய்யும், மாரிமாட் - மழைக்கு, வுலகு - உலகமானது, டென்னாற்றுங் - என்ன மறு உபகாரஞ் செய்கிறதென்று, கொல்லோ - சொல்லக்கூடு மென்பது பதம்.

(பொ.) ஏதொரு பிரிதி உபகாரமும் விரும்பாது முடிவின்றி பெய்யும் மழைக்கு உலகமானது என்ன மறு உபகாரஞ் செய்கிறதென்று சொல்லக்கூடும் என்பது பொழிப்பு.

(க.) உலகமும் உலக சீவராசிகளும் மழைக்கு யாதொரு பிரிதி உபகாரமுஞ் செய்யாதிருந்தபோதினும் அம்மழையும் பிரிதி உபகாரங் கருதாது இடைவிடா காலத்திற்கு காலம் பெய்து காப்பதுபோல் மக்களும் ஒப்புரவோராம் மற்ற மக்களது உபகாரங் கருதாது காக்கவேண்டும் என்பது கருத்து.

(வி.) சீவகாருண்யத்தையும் ஒழுக்கத்தையும் மேற்கொண்டு உலகமக்களது வாழ்க்கையில் இல்லறத்தோன் ஒப்புரவோரின் பயனைக் கருதாது அவர்களுக்கு உபகாரியாயிருந்து வாழ்கவேண்டும் என்பதற்கு மழையை உவமித்துக் கூறிய விரிவாம்.

2.தாளாற்றி தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மெ செய்தற் பொருட்டு.

(ப.) தாளாற்றி - காலையுங்கையையு மியந்திரமாகக்கொண்டு, தந்த - சேகரித்த, பொருளெல்லாந் - திரவியங்க ளெல்லாம், தக்கார்க்கு - உழைப்பாளிகளுக்கு, வேளாண்மெ - உழவின்சுக யீய்ந்து, செய்தற்பொருட்டு - உபகாரிகளாக விளங்கவைப்பதற்கேயா மென்பது பதம்.

(பொ.) காலையுங் கையையும் இயந்திரமாகக்கொண்டு சேகரித்த திரவியங்களெல்லாம் உழைப்பாளிகளுக்கு உழவின் சுகமீய்ந்து உபகாரிகளாக விளங்கவைப்பதற்கேயாம் என்பது பொழிப்பு.

(க.) கையையுங் காலையும் ஓர் இயந்திரம்போற்கொண்டு சேகரித்தப் பொருளை பூமியில் உழைக்கத்தக்கப் புருடர்களுக்கு உதவி தானியவிருத்திச் செய்து சருவசீவர்களுக்கும் உதவும் பொருட்டேயாம் என்பது கருத்து.

(வி.) ஓடித் திரிந்து சேகரித்தப் பொருளைக்கொண்டு ஆற்றலுற்றுள்ளோர் பூமியில் உழைக்கத் தக்கோர்களைக் கொண்டு தனமுதலீய்ந்து உழுது பண்படுத்தி தானியவிருத்திச்செய்து சருவசீவர்களுக்கும் உபகாரியாக இருக்கும்படி செய்யவேண்டும் என்பது விரிவு.