பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/687

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 677


3.புத்தே ளுலகத்து மீண்டும் பெறலறிதே
யொப்புரவி நல்ல பிற.

(ப.) யொப்புரவி - ஒப்பி உரவுகொண்டோர்களுக்கும், நல்ல - மற்றும் விவேகமிகுத்தப் பெரியோர்களுக்கும், பிற - அன்னியருக்கும் உபகாரஞ் செய்யாரேல், புத்தேளுலகத்து - புத்ததேவ னுலகத்தையும், மீண்டும் - வேறு சுகத்தையும், பெறலரிதே அடைத லரிதாமென்பது பதம்.

(பொ.) ஒப்பி உரவுகொண்டோர்களுக்கும், மற்றும் விவேகமிகுத்தப் பெரியோர்களுக்கும் அன்னியருக்கும் உபகாரஞ்செய்யாரேல் புத்ததேவன் உலகத்தையும் வேறு சுகத்தையும் அடைதலரிதாம் என்பது பொழிப்பு.

(க.) தன்னுரவினர் உபகாரிகளாவது போல் ஒப்புரவினருக்கும் நலமிகுத்தபெரியோருக்கும் மற்றும் அன்னியருக்கும் உபகாரிகளாக விளங்காவிடின் புத்ததேவனுலகமும் மற்றுஞ் சுகங்களும் பெறுதலரிதாம் என்பது கருத்து.

(வி.) உலக மாக்கள் தன்னுரவினருக்கே உபகாரம்புரிவது இயல்பாதலின் அவ்வகைத் தன்னவரைமட்டிலும் நாடிச்செய்தல் உபகாரமென்னு மொழிக்கு உறுதி பெறாதாதலின் தன்னவரென்றே அன்னியரையும் நேசிப்பதே உபகாரமென்பதுகொண்டு புத்ததேவ னுலகாம் வானராட்சியத்தையும் மற்றுஞ் சுகத்தையும் விரும்புவோர் ஒப்புரவினருக்கும், நல்லோருக்கும், பிறருக்கும் உபகாரிகளாக விளங்கவேண்டும் என்பது விரிவு.

4.ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

(ப.) ஒத்த - சகலமக்களிடத்தும் ஒத்துவாழும் வாழ்க்கையை, தறிவா - உணர்வோன், னுயிர்வாழ்வான் - சுகசீவியாக வாழ்வான், மற்றையான் - அவ்வகை வாழ்க்கையற்றவனோ, செத்தாருள் - மரித்தோருள், வைக்கப்படும் - ஒருவனாக சேர்க்கப்படுவானென்பது பதம்.

(பொ.) சகலமக்களிடத்தும் ஒத்துவாழும் வாழ்க்கையை உணர்வோன் சுகசீவியாக வாழ்வான். அவ்வாழ்க்கை அற்றவனோ மரித்தோருள் ஒருவனாக சேர்க்கப்படுவான் என்பது பொழிப்பு.

(க.) தன்னுரவினரைப்போல் ஏனையோருக்கும் உபகாரியாக வாழ்வோன் சுகசீவியாக வாழ்வான். அவ்வகை உபகாரமற்று வாழ்வோன் மரித்தோருள் ஒருவனாக எண்ணப்படுவான் என்பது கருத்து.

(வி.) எத்தால் வாழலாம் ஒத்தால் வாழலாம் என்னும் முதுமொழிக்கிணங்க சகலசீவர்களும் ஓங்கி தன்னிலையடைதற்கு உபகாரியாக விளங்குவோன் என்றென்றும் சுகசீவியாக வாழ்வான். அத்தகைய சீவகாருண்யமற்று வாழ்வோன் உலகத்தில் சீவித்திருப்பினும் மரித்தோருள் ஒருவனாகக் கருதப்படுவான். ஆதலின் ஒப்புரவொழுகலில் நல்லொழுக்கமே மேலென்பதற்குச் சார்பாய் அறநெறிச்சாரம் "தானத்தின்மிக்க தருமமும் தக்கார்க்கு, ஞானத்தின்மிக்கவு சாத்துணையும் - மானம், அழியா வொழுக்கத்தின் மிக்கதூஉமில்லை, பழியாமல் வாழுந்திறம்" என்பது கொண்டு ஒப்புர வொழுகல் வேண்டும் என்பது விரிவு.

5.ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
பேரறி வாளன் றிரு.

(ப.) ஊருணி - தேசத்துள், நீர்நிறைந்தற்றே - நீர்வளம் பொருந்தியபோது, யுலகவாம் - உலகமென்னும் சிறப்பைப்பெறும் (அவைபோல்) பேரறிவாளன் -விவேக மிகுதியால் ஒப்புரவொழுகுவோன், றிரு - செல்வனென்னும் சிறப்பைப்பெறுவானென்பது பதம்.

(பொ.) தேசத்துள் நீர்வளம் பொருந்தியபோது உலகமென்னும் சிறப்பைப்பெறும் (அவைபோல்) விவேக மிகுதியால் ஒப்புரவொழுகுவோன் செல்வன் என்னும் சிறப்பைப் பெறுவான் என்பது பொழிப்பு.

(க.) நீர்வளம் பொருந்தி நிலவளமான போது உலகமக்கள் சிறப்படைவதுபோல விவேக மிகுத்தோன் உள்ளதைக்கொண்டு உபகாரியாக விளங்கின் செல்வன் என்று அழைக்கப்படுவான் என்பது கருத்து.