பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/693

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 683

ஈயுங்குணம் எழாது அதை காப்பதுந் துன்பம், செலவழிவதுந் துன்பம், இழப்பதுந் துன்பமாகக்கொண்டழிவதால் ஈகையின் குணம் எழாதோன் மரண துன்பத்தினும் அதிக துன்பத்தை அனுபவித்தே தீருவான் என்பது விரிவு.

29. புகழ்

இல்லறத்தோன் மிக்க ஈகையுடன் வாழினும் அவைப் புகழ்பெற வாழ்தலே மேலாதலின் புகழ்வோர் நிலையையும் புகழ்பெறுவோன் பயனையும் இவ்விடம் விளக்குகின்றார்.

1.ஈத லிசைபட வாழ்த லதுவல்ல
தூதிய மில்லை யுயிர்க்கு.

(ப.) ஈத - வறியோர்க்கீவதில், லிசைபட - புகழ்பெற, வாழ்த - வாழ்வதே, லதுவல்ல - வஃதின்றி, தூதியம் - பயன், மில்லை - வேறில்லை , யுயிர்க்கு - மனுடசீவர்களுக்கென்பது பதம்.

(பொ.) வறியோர்க்கு ஈவதில் புகழ்பெற வாழ்தலே நன்று. அஃதின்றி பயன்வேறில்லை மனுட சீவர்களுக்கு என்பது பொழிப்பு.

(க.) ஏழைகளுக்கு ஈயுந் தன்மமானது அவர்களால் கொண்டாடும்படி ஈவதே நன்று. அதுவன்றி ஈயும் மக்களுக்கு மற்றோர் பயனுமில்லை என்பது கருத்து.

(வி.) ஈவோர் ஈயுஞ் செயலில் மிக்கோர் என்றும் நல்லவர் என்றும் வறியோர்களால் புகழத்தக்கக் கருணையின் செயலே நன்றாதலின் அக்கருணையி னிலையே காரணமாகக்கொண்டு ஈவோன் மிருதுவாக்கிற்குச் சார்பாய் அறநெறிச்சாரம் "கொடுப்பான்வினையல்லன் கொள்வானுமல்லன், கொடுக்கப்படும் பொருளுமன்றால் - அடுத்தடுத்து, நல்லவையாதாங்கொல் நாடியுரையாய் நாப்பண் நயந்து" என்பது விரிவு.

2.உரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன்
றீவார் மேனிற்கும் புகழ்.

(ப.) உரைப்பா - சொல்லும்படியானவர்கள், ருரைப்பவை - சொற்கள். யெல்லா - யாவும், மிரப்பார்க்கொன் - வறியார் கேட்கு மொன்றை, றீவார் - கொடுப்பவரை, மேனிற்கும் - சார்ந்தேநிற்கும், புகழ் - கீர்த்தி யென்பது பதம்.

(பொ.) சொல்லும்படியானவர்கள் சொற்கள் யாவும் வறியார் கேட்கும் ஒன்றை கொடுப்பவரை சார்ந்தே நிற்குங் கீர்த்தி என்பது பொழிப்பு.

(க.) புகழ்ச்சிபெற சொல்லும் சொற்கள் யாவும் ஏழைகள் கேட்குமொன்றை ஈவோனையே சார்ந்து நிற்கும் என்பது கருத்து.

(வி.) உலகமக்கள் புகழ்ந்து பேசும் வார்த்தைகளுள் ஏழைகள் கேட்கும் பொருளை இல்லையென்னாது ஈய்ந்து ரட்சிப்பவனது செயலையே பெரும்பாலுங் கொண்டுளதாம் என்பது விரிவு.

3.ஒன்றாவுலகத் துயர்ந்த புகழல்லாற்
பொன்றாது நிற்பதொன் றில்

(ப.) வுலகத் - உலகத்தினிடத்து, ஒன்றா - முதலாக, துயர்ந்த - சிறந்தது, புகழல்லாற் - கீர்த்தியே யன்றி, பொன்றாது - அதற்கொப்ப, நிற்ப - நிலையாகநிற்பது, தொன்றில் - வேறொன்றுமில்லையென்பது பதம்.

(பொ.) உலகத்தினிடத்து முதலாக சிறந்தது கீர்த்தியேயன்றி அதற்கொப்ப நிலையாக நிற்பது வேறொன்றும் இல்லை என்பது பொழிப்பு.

(க.) இல்லறத்தையே நல்லறமாகக்கொண்டொழுகும் மாக்கள் என்றும் அழியா புகழ்பெற வாழ்தலே வாழ்க்கை என்பது கருத்து.

(வி.) உலக வாழ்க்கையுள் முதலாக நிற்பது சிறந்த புகழ் ஒன்றேயாம் அப்புகழினும் வறியார்க்கு ஈய்ந்து ரட்சிக்கும் புகழே ஒப்பற்ற அழியாப் புகழ் என்பது விரிவு.