பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/701

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 691

 தாழ்ந்த கடைநிலையையும் அடைவானென வருந்திக் கூறவேண்டியதியாதெனில் பூமியினின்று நல்லேதுவால் புற்பூண்டுகள் தோன்றி, புற்பூண்டுகளினின்று புழுக்கீடாதிகள்தோன்றி, புழுக்கீடாதிகளினின்று ஊர்வனங்கள் தோன்றி, ஊர்வனங்களினின்று மட்சம் பட்சிகள் தோன்றி, மட்சம் பட்சிகளினின்று மிருகாதிகள் தோன்றி, மிருகாதிகளினின்று மக்கள் தோன்றி, மக்களினின்று தேவர்கள்தோன்றி, மேனோக்குதற்குக் காரணம் விவேகமிகுதியால் உண்டாம் நல்வினையே ஆதலின் அவற்றை மறந்து விவேகக்குறைவால் மாளாக் கொடுவினைகளையே செய்வோன் மேனோக்கும் சுகநிலையற்று கீழ்நோக்காம் தாழ்ந்தபிறவியிற் சுழன்று தீராதுக்கத்திற்கு ஆளாக்குங் கொடுவினைப்பயனை சங்கஞ்சேர்ந்து மேநோக்குவோனுக்கு விவரித்த விரிவு. அறநெறிச்சாரம் “இறந்தபிறப்பாற் றான்செய்தவினையைப், பிறந்த பிறப்பாலறிக - பிறந்திருந்து, செய்யும்வினையா வறிகவினிபிறந், தெய்தும்வினையின் பயன்."

3.நுண்ணிய நூற்பல கற்பினு மற்றுந்தன்
னுண்மெ யறிவே மிகும்.

(ப.) நுண்ணிய - அறிவை வளர்க்கும் நுட்பமாகிய, நூல்பல - பல நூற்களை, கற்பினு - வாசிக்கினும், மற்றுந்தன் - தான் கற்றுவிட்ட, லுண்மெயறிவே - விவேகநுட்பமே, மிகும் - மேலாக வளருமென்பது பதம்.

(பொ.) அறிவை வளர்க்கும் நுட்பமாகிய பல நூற்களைவாசிக்கினும் தான் கற்றுவிட்ட விவேக நுட்பமே மேலாக வளரும் என்பது பொழிப்பு.

(க.) அறிவை வளர்க்கும் பலவகையான நூற்களைப் படித்தபோதினும் தன் அறிவை வளர்த்துவிட்ட குறைவே மேனோக்கி வளரும் என்பது கருத்து.

(வி.) ஒருவன் தனது அவாவின் மிகுதியால் பலவகையான கலை நூற்களைக் கற்கினும் தான் முற்பிறவியில் கற்றுவிட்டக்குறைவே இப்பிறவியில் தொடர்ந்து மேலாக வளரும் என்பது விரிவு.

4.இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.

(ப.) வேறுலகத்தியற்கை - நல்வினையினியல்பா லுலகத்தில் தோன்றுவது, இரு - இரண்டுவகைப்படும், திருவேறு - செல்வந்தனாக வாழ்தலொன்று, தெள்ளியராதலும் - விவேகமிகுத்த ஞானிகளாதலாகிய, வேறு - மற்றொன்றுமேயாமென்பது பதம்.

(பொ.) நல்வினையின் இயல்பால் உலகத்தில் தோன்றுவது இரண்டு வகைப்படும், செல்வந்தனாக வாழ்தல் ஒன்று விவேகமிகுத்த ஞானிகளாதலாகிய மற்றொன்றுமேயாம் என்பது பொழிப்பு.

(க.) உலகத்தில் நல்வினைப்பயனால் தோற்றுவோர் செல்வமுடையோ ரொருவரும் விவேகமிகுத்த ஞானிகளொருவருமாகிய இருவர்களுமேயாம் என்பது கருத்து.

(வி.) உலகத்தில் உடலெடுத்த மக்கள் தங்களது நல்வினைப்பயனால் இரு வகை சுகங்களை அநுபவிக்கின்றார்கள். அதாவது செல்வத்தைப்பெற்று அதனால் கிஞ்சித்து சுகமடைவோரும், விவேகமிகுத்த ஞானிகளாகி அனந்தானந்த சுகமடைவோரும் ஆகிய விரு வகுப்போருள் துறவு பூண்டோரே மேலோராதலின் தெள்ளியோரை வருவித்துக் கூறிய விரிவு.

5.நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவு
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு.

(ப.) செல்வஞ் - ஊழ்வலியால் சேர்ந்த திரவியத்தை, செயற்கு - செலவு செய்யுங்கால், நல்லவை - நற்கருமங்கள், யெல்லாம் - யாவும், அந்தீயவாந் - அங்கு தீதாக முடியும், தீயவு - துற்கருமங்களைச் செய்யின் நல்லவாஞ் - அஃது நல்லவையாக முடியுமென்பது பதம்.

(பொ.) ஊழ்வலியால் சேர்ந்த திரவியத்தை செலவு செய்யுங்கால் நற்கருமங்கள் யாவும் அங்கு தீதாக முடியும், துற்கருமங்களைச் செய்யின் அஃது நல்லவையாக முடியும் என்பது பொழிப்பு.