பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/703

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 693


(பொ.) இவைகளைக்கண்டு இல்லந்துறந்தோர் வேறு பற்றுக்களுமின்றி திடநிலையில் நிற்பரேல் உடூடே அகலுமென்னலாம் என்பது பொழிப்பு.

(க.) ஆகையால் பொருள் சேருவதையும் அழிவதையுங்கண்டு துறவுபூண்டவர்கள் மற்றுமுள்ள பற்றுக்களை அகற்றுவரேல் நாளுக்குநாள் அவை கழிந்துபோம் என்பது கருத்து.

(வி.) பேராசையாற் பொருளைச் சேர்த்துப் பயன்படாதோரையும், அதியாசையின்றி சேர்த்த பொருள் பயனுறுவதையுங்கண்டு நிராசையுறில் நித்திய சுகம் உண்டென்று உணர்ந்த பெரியோர் துறவுபூண்டு சங்கஞ்சேர்ந்து சமணநிலை பெரினும் ஊழ்வலியிலுள்ளப் பற்றுக்களையும் நீக்குவதாயின் உடூடே கழியுமென்று முன்னூழினது முநிவை முற்றுஞ் சாதிக்க விளித்த விரிவு.

9.நன்றாங்கா நல்லவாக் காண்பவ ரன்றாங்கே
லல்லற் படுவ தெவன்.

(ப.) நன்றாங்கா - எண்ணிய காரியம் சுகமாக முடியின், நல்லவா - அதனை யானந்தமாக, காண்பவ - பார்ப்போர், ரன்றாங்கே - உடனே அக்காரிய முடியாவிடில், லல்லற்படுவ - துக்கத்தை யனுபவிப்போன், தெவன் - யாவனென்பது பதம்.

(பொ.) எண்ணிய காரியம் சுகமாக முடியின் அதனை ஆனந்தமாகப் பார்ப்போர் உடனே அக்காரியம் முடியாவிடில் துக்கத்தை அநுபவிப்போன் யாவன் என்பது பொழிப்பு.

(க.) இஃது ஊழின் பயனைத் துறவோர்க்கு ஊட்டியக் கருத்தாதலின் எடுத்த முயற்சி உடனுக்குடன் முடியின் ஆனந்திப்பதும் அவ்வகை முடியாது நாள் பெருகின் அங்கு துக்கிப்பது துறவியின் செயலல்ல என்பது கருத்து.

(வி.) துறவு பூண்டோன் நான், நீ என்னும் பின்னபாவம் இரண்டும், நாமரூபம் என்னுந் துவிதமாய இரண்டும், சுகதுக்கம் என்னுங் காட்சிகளிரண்டும் அறவேண்டியவனாதலின் சமணநிலைக்கு முனிந்தோன் எடுத்த காரியம் இனிது முடியில் ஆனந்திப்பது, முடியாதுறில் துக்கிப்பதில் யாது பயன். விடாமுயற்சியால் சாதித்து சித்திப்பெறுவதே அழகு என்பது விரிவு.

10.ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தாமுந் துறும்.

(ப.) ஊழிற் - முற்பிறவியிற் செய்த தீவினை, பெருவலியாவுள - மிகு வலுபெற்றிருக்கின், மற்றொன்று - அதற் கெதிரிடையாய நல்வினை, சூழினும் - அதனைக் கடக்க முயலினும், தாமுந்துறும் - தீவினையே முன்வந்து நிற்குமென்பது பதம்.

(பொ.) முற்பிறப்பிற் செய்ததீவினை மிகு வலுபெற்றிருக்கின் அதற்கெதிரிடையாய நல்வினை அதனை கடக்க முயலினும் தீவினையே முன்வந்து நிற்கும் என்பது பொழிப்பு.

(க.) துறவுபூண்டோர் எவ்வகையாய நற்சாதனங்களைப் புரியினும் முற்பிறவியிற்செய்த துற்சாதன ஊழே முன்வந்து முயலுமாதலின் மேலும் மேலும் நற்சாதனத்தைப் பெருக்க முயலவேண்டும் என்பது கருத்து.

(வி.) இல்லறம் விடுத்துத் துறவறம் பூண்டோர் தங்கள் தங்கள் ஞானசாதனமாம் இதயசுத்தஞ் செய்யுங்கால் முற்பிறவியிற் சேர்ந்துள்ள இதய களங்குகள் மேலும் மேலும் வந்து மூடும் ஆதலால் சங்கஞ்சேர்ந்து சமணநிலை பெற்றவர்கள் மனத்தினது மாசுகளை அகற்றுஞ் சாதனத்திலேயே முனிந்து முன்மாசுகளை அறக்கழுவிவிடவேண்டும் என்பது விரிவு.

32. துறவு

ஊழ்வலியிற் துறந்த முனிவர் சங்கஞ்சேர்ந்து ஒருபொருளுண்டென்றும் இல்லையென்றும் ஓதுதலில் தானேதானாய் நிலைக்கவேண்டி பற்றறுக்கும் வகைவழிகளை விளக்கலானார்.