பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/708

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

698 / அயோத்திதாசர் சிந்தனைகள்


- எவ்வகையால், மாளு - ஆண்டுக்கொள்ளும், மருள் - கருணையென்பது பதம்.

(பொ.) தன்னுடலது புலாலைப் பெருக்குதற்கு தான் மற்றோர் உடலது புலாலைப் புசிப்போனை எவ்வகையால் ஆண்டுக்கொள்ளும் கருணை என்பது பொழிப்பு.

(க.) கருணைஎன்பதின்றி ஏனய உயிரை வதைத்துப் புலால் உண்போனைக் கருணையானது எவ்வகையால் ஆண்டுக்கொள்ளும் என்பது கருத்து.

(வி.) கருணை, ஈகை, சாந்தம், இம்மூன்றும் மெய்ப்பொருளின் சுயவடிவமாதலின் அம்மெய்யமைந்த பிற மெய்வளர்த்தற்கு சீவகாருண்யமின்றி சீவன்களைக் கொன்று அதனூன் புசிப்பதாயின் இவனுள் காருண்ய பெருக்கமாம் அருள்நிலை எவ்வகையால் வளரும். ஆகலின் துறவு பூண்டோன் அருளை வளர்த்து தெய்வகதி அடைய வேண்டின் புலால் உண்பதை அகற்றவேண்டும் என்பதற்குச் சார்பாய், சீவகசிந்தாமணி "ஊன்சுவைத் துடம்புவீக்கி நரகத்தி லுறைதனன்றோ வூன்றினாதுடம்பு வாட்டித் தேவராயுறைதனன்றோ, வூன்றியிவ்விரண்டி னுள்ளுமுறுதி நீயுரைத்திடென்ன, வூன்றினாதொழிந்து புத்தேளாவதே யுறுதியென்றான்” என்று கூறிய சார்பு நூலாதார விரிவு.

2.பொருளாட்சி போற்றா தார்க்கில்லை யருளாட்சி
யாங்கில்லை யூன்றின் பவர்க்கு.

(ப.) பொருளாட்சி - பொருளி னிலையை, போற்றாதார்க்கில்லை - போற்றி வாழாதார்க்கு அஃது நிலையாதது போல், யூன்றின்பவர்க்கு - புலாலை யுண்போர்க்கு, யருளாட்சி - கருணைநிலை, யாங்கில்லை - அவர்களிட மிறாதென்பது பதம்.

(பொ.) பொருளின் நிலையை, போற்றிவாழாதார்க்கு அஃதுநிலையாதது போல் புலாலை உண்போர்க்கு கருணைநிலை அவர்களிடமிராது என்பது பொழிப்பு.

(க.) பொருளினை உறுதிகொண்டு சேர்க்காதவர்களுக்கு அவை சேராதது போல் சீவகாருண்யமின்றி புலால் உண்போருக்கு அருள் நிலை ஒங்காது என்பது கருத்து.

(வி.) பொருளை நிலைபெற பெருக்கவேண்டியவன் அப்பெருக்க முயற்சியில் இருப்பானாயின் அஃது பெருகி ஆட்சிபெறும். அங்ஙனம் முயலாவிடில் பெருகாதது போல் அருளை வளர்க்கவேண்டியவன் சீவகாருண்யத்தால் புலாலை அகற்றல்வேண்டும். அகற்றாது புலால் உண்போனுக்கு சீவகாருண்யம் இராதாதலின் அருளும் ஆட்சியுமுறாது என்பது விரிவு.

3.படைகொண்டார் நெஞ்சம்போ னன்றூக்கா தொன்ற
னுடல்சுவை யுண்டார் மனம்.

(ப.) படைகொண்டார் - யுத்த களத்தில் நிற்போர், நெஞ்சம்போ - மனம்போல், னன்றூக்கா - நற்சுகமிறாததை, தொன்ற - ஒக்கும், னுடல்சுவை - புலாலை யின்பமாக, யுண்டார் - உண்போர், மனம் - மனமுமென்பது பதம்.

(பொ.) யுத்தகளத்தில் நிற்போர் மனம்போல நற்சுகமிறாததை ஒக்கும் புலாலை இன்பமாக உண்போர் மனமும் என்பது பொழிப்பு.

(க.) புலாலினை இன்பமாக உண்போர் மனமானது யுத்தகளத்திற் போர்புரிவோன் கலக்கமுற்ற நெஞ்சத்தை ஒக்கும் என்பது கருத்து.

(வி.) யுத்தகளத்தில் இவன் மற்றொருவனைக் கொல்லமுயன்று மற்றொருவன் இவனைக் கொல்ல முயலும் பயத்தால் நெஞ்சம் கலங்கி விழித்திருப்பது போல மற்றொரு உடலை வதைத்து அதன் புலாலைத் தின்போன் தன் புலாலைத் தின்ன மற்றொன்று காக்கும் என்னுங் கலக்கத்திலுள்ளக் கண்கலங்கி நிற்கும் என்பது விரிவு.