பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 61

12. ஸ்ரீபாதசேவை விவரம்

ஸ்ரீபாதமென்றும், கமலபாதம் என்றும், திருவடி என்றும், தாமரையடி என்றும் வழங்கும் பூர்வசரித்திர பாடம் யாதெனில்: -

புத்தபிரான் காசியில் முதற்சங்கத்தை நாட்டிவிட்டு உலகெங்கும் அறக்கதிர் விரித்துவருங்கால் சதுரகிரி என்றும் இரத்தின தீவம் என்றும் வழங்கும் ஓர் மலையினுச்சியில் ஏறி அன்பின் விருத்தியையும், அன்பின் ஆதரையையும், அன்பின் ஆறுதலையும் அதன் சுகப்பலனையும் விளக்கி அன்பின் அமுதத்தை ஊட்டுங்கால் ஒவ்வோர் சீவராசிகளின் இதயங்களுருகி பரவசம் உற்றதுமன்றி பகவன் பாதம் படிந்திருந்த பாறையும் உருகி அவர் பாதத்திருந்த தாமரை ரேகையுடன் பாதமும் பதிந்து படிவு உண்டாயிற்று.

பதிவாகும் ஸ்ரீபாத தோற்றத்தைக் கண்ட சங்கத்தவர்களும் மற்றும் அன்பர்களும் ஆனந்தக் கூத்தாடி அன்பைப் பரவச்செய்த அப்பன் அமுதவாக்கின் உரையால் அடியவர் உள்ளங்களுருகியதும் அன்றி பாறையும் உருகி பாதசேவை தந்ததென்றெண்ணி இடைவிடா அன்பின் பெருக்கத்தில் நின்று ஸ்ரீபாதசேவை செய்துவந்தார்கள்.

காலை முதல் உச்சிவரை அமுதவாக்கின் போதத்தைக் கேட்டிருந்த மக்கள் தாகவிடாய் கொண்டு உச்சிமலையில் தவிப்பதைக் கண்ட காருண்யன் தனது ஏக சடையை நீட்டி தெண்ணீர் பொழியச்செய்து சீவராசிகளின் தாகவிடாய் தீர்த்து ரட்சித்தார். அன்றுமுதல் அந்நீர் பெருகி ஓடிய ஓடைக்கு கங்கைநதி என்றும், அவருக்கு கங்கை ஆதாரனென்றும் பெயருண்டாயிற்று.

பௌத்த தரும அரசர்கள் யாவரும் ஸ்ரீபாத தரிசனாசேவைச் செய்து சத்தியதருமத்தில் நடந்துவந்தார்கள்.


மணிமேகலை

மீங்கித னிகத்தி விரத்தினதீவத் / தோங்குயர் சிமயத்துச்சி மீமிசை
யறவியங்கிழவோ னடியிணையாகிய / ஆதி முதல்வ னறவாழி யாள்வோன்
பாதபீடிகை பணித்தனளேத்தி, / மாரனை வெல்லும் வீர னின்னடித்
தீநெறிக் கடும்பகை கடப்போய் நின்னடி / பிறற்கற முயலும் பெரியோய் நின்னடி
துறக்கம் வேண்டா தொல்லோய் நின்னடி / யென் பிறப்பொழிய விருந்தோய் நின்னடி
கண்பிறர்க்களிக்குங் கண்ணோய் நின்னடி / தீமொழீ கழித்த செவியோய் நின்னடி
வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி / நாகர்துயர்கெட நடப்போய் நின்னடி
யூகர் துயர மொழிப் போய் தின்னடி. / வணங்குத லல்லது வாழ்த்துதலென்னோ
வடங்காதென்ற வாயிழைமுன்னர் / போதிநீழற் பொதிந்து தோன்று
நாதன்பாத நவைகெட வேத்தி / ஆதி முதல்வன் அருந்துயர் கெடுக்கும்
பாதபங்கய மலர் பணிந்தன ராதலி


சிலப்பதிகாரம்

விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன் / தண்பதங் கொள்ளுந் தலைநாள் போல


சீவகசிந்தாமணி

பாலருவிதிங்கடோய் முத்தமாலைப்பழிப்பிநெடுங் குடைக்கீழ்
பாய்பரிமான்றேர்
கோலருவி வெஞ்சிலையான் கூர்வாளோடு மணிக் கேடகமு மறமுமாற்றி
வாலருவி வாம னடித்தாமரை மலர்சூடி மந்திரமென் சாந்து பூசி
வேலருவி கண்ணினார் மெய்காப் போம்பவேந்தன் போய் விண்ணோர் விருந்தாயினானே.

சூளாமணி

காமனை கடிந்தனை காலனை காய்ந்தனை / தேமலர் மாரியை திருமறு மார்பனை
தேமலர் மாரியை திருமறு மார்பனை / மா மலர்வண்ணனின் மலரடி வணங்கினம்.

புத்தபிரானுக்கு ஏகசடை நின்றதற்கும் அதனின்று தெண்ணீ ரளித்த தற்கும் நூற்சாட்சிகள்.

வீரசோழியம்

குறியாரெனவே புனலின்மீ / துறுதாமரைமே
லுறைவார்தா நெறியார்சடையாய் நின்பாத / மறிவா ரினியா ரறிவாரே.
வரிகொளரவு மதியும் / புரிவுள சடையும்
புரிவுள சடைமேற் புநலும் பிறழுமே.

நிகழ்காலத்திரங்கல்

தாகவிடாய் தீர்த்தோன் சடைமுடியில்கங்கை / யேகநதிவிண்டா னிறையோ னதிசயமே.