பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/711

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 701


10.கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
யெல்லா வுயிருந் தொழும்.

(ப.) கொல்லான் - சீவப்பிராணிகளை வதையாதவனும், புலாலை - ஊனினை, மறுத்தானை - தின்னாதொழித்தவனு மானோனை, கைகூப்பி - சரணாகதியென, யெல்லாவுயிருந் - சருவவுயிர்களும், தொழும் - வணங்கு மென்பது பதம்.

(பொ.) சீவப்பிராணிகளை வதையாதவனும் ஊனினைத் தின்னாது ஒழித்த வனுமானோனை சரணாகதியென சருவசீவர்களும் வணங்கும் என்பது பொழிப்பு.

(க.) கருணை நிறைவால் சீவப்பிராணிகளைக் கொல்லாதவனும் அவா அறுத்தலால் புலாலினை உண்ணாதவனும் ஆகிய ஒருவனது கருணாகர முகங் கண்டபோதே சருவசீவன்களுங் கைகூப்பி வணங்கும் என்பது கருத்து.

(வி.) சருவசீவர்கள்மீது இதக்கமுற்று காக்குங் கருணையாளன் ஓர் உயிரினையும் துன்பஞ்செய்யமாட்டான். நாவில் உருசிக்கும் பொருட்களின் மீது அவா அற்றவன் புலாலை விரும்பமாட்டான். இவ்விரு வகைச் செயல் முதிர்ந்தவிடத்து உண்மெய் விளக்கத்தால் தண்மெய் உண்டாகி கருணாகரமுகங் காணலால் சருவசீவர்களும் அம்முகத்தைக் காணும்போதே அவைகளுக்கு அவ்வன்பு எழுவி வணங்குஞ் செயல் உண்டாதலால் ஒருயிரை வதையாதும் புலாலை உண்ணாதுமுள்ள பெரியோனை சருவ சீவர்களும் வணங்கும் என்பது விரிவு.

34. இன்னா செய்யாமெய்

இன்னாமெய் என்னும் மொழியினது பொருள் ஒருவனுள்ளத்தினின்று எழுஉங் கெட்ட எண்ணங்களேயாம். அதாவது ஓர் உயிரினை வதைப்பதினும் அதன் புலாலையுண்பதினும், அன்னியன் குடியை கெடுப்பதற்கும், அன்னியனை துன்பஞ் செய்வதற்கும், அன்னியனை சீர்பெறவிடாம லழிப்பதற்கும், பொறாமையை வளர்ப்பதற்கும், வஞ்சினத்தை நிறப்புதற்குமாய துற்கன்மங்களே பெரிதாதலின் அத்தகைய இன்னாவென்னும் கொடுஞ்சயல்களை துறவிகள் உள்ளத்தில் தோன்றவிடாமலும், தோன்றினும் அவற்றை நிலைக்கவிடாமலும் மனமாசு கழுவும் வழிவகைகளை விளக்குகின்றார்.

1.சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமெ மாசற்றார் கோள்.

(ப.) சிறப்பீனுஞ் - துறவி அட்டமாசித்தியால், செல்வம் - நிறைந்த பாக்கியத்தை, பெறினும் - அடைந்தபோதினும், பிறர்க்கின்னா - அன்னியருக்குத் துன்பமுண்டாகுஞ் - செயலை, செய்யாமெ - செய்யாதவனே, மாசற்றார் - மனக் களங்கமற்றோர், கோள் - கொள்கையுடையவனாவனென்பது பதம்.

(பொ.) துறவி அட்டமாசித்தியால் நிறைந்த பாக்கியத்தை அடைந்தபோதினும் அன்னியருக்குத் துன்பமுண்டாகுஞ் செயலைச் செய்யாதவனே மனக்களங்கமற்றோர் கொள்கையை உடையவனாவன் என்பது பொழிப்பு.

(க.) துறவியானவன் தனது யாகமென்னு நற்காலபலனால் அட்டமாசித்துக்களை ஆடியபோதினும் அச்சித்தினால் ஒருவருக்கும் தீங்குநேராவண்ணம் ஆடுவதே களங்கமற்றோர் செயலை உரித்தாம் என்பது கருத்து.

(வி.) துறவுபூண்டோர் புத்த சங்கஞ்சேர்ந்து சமணநிலையுற்று சதா சாதன சுவாசசேர்க்கைப் பெற்று, மனேலயமுற்று, உலகத்தின் சகல சிறப்பினும் மேலாய அட்டமாசித்தி சிறப்பைப்பெறினும் அச்சித்தினால் ஏனையோர்க்கு இடுக்கண் உண்டு செய்வதாயின் மனமாசறுக்குஞ் செயலற்று களங்கமிகும், ஆதலின் கிஞ்சித்தடைந்த மனேசுத்தத்தால் சிறந்த, கீர்த்தியுறும் சித்தினைப்பெற்றும் அதனாற் பிறரைத் துன்புறச்செய்யின் மீண்டுங் களங்கமேறி துன்புறுவார் என்றறிந்த மேலோன் சிறப்பாய சித்தியினைப் பெற்ற துறவோர் ஓர் உயிரினுக்குந் தீங்கிழையாது மேலும் மேலும் இதயசுத்தம் உண்டாக்கிக்