பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/715

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 705


கோறுவோர் பிறருக்குத் துன்பஞ்செய்யார்கள் என்பது பொழிப்பு.

(க.) மக்களுக்குத் துன்பமுண்டாதல் யாவுந் தாங்கள் பிறருக்குச் செய்த துன்பத்தின் பிறிதிபயனே ஆதலின் தனக்கோர் துன்பம் அணுகாதிருக்க வேண்டும் என்று துறந்த துறவிகள் பிறருக்கோர் துன்பமுஞ் செய்யார்கள் என்பது கருத்து.

(வி.) உலக மக்கள் மற்ற சீவராசிகளுக்குச் செய்துவந்த துன்பங்களின் பிறிதி பலனே தங்களைத் துன்புறுத்த வந்து தோன்றுவது இயல்பாதலின் துக்கம் அகலவேண்டி துறவுற்ற முநிவர் பிறவுயிர்களுக்கோர் துன்பமுஞ் செய்யார்களென்பதாம். அங்ஙனஞ் செய்வார்களாயின் தாங்கள் கோறி துறந்த துக்கம் அகலாது என்பது விரிவு.

35. கூடாவொழுக்கம்

அதாவது இல்லறவொழுக்கம் துறவறவொழுக்கம் இவ்விரண்டினுள் இல்லறத்தினின்று இதயசுத்தமாகாதென்று எண்ணி சங்கமென்னுந் தெய்வசபை சேர்ந்து பொன்னாடைப்பூண்டு பாத்திரங் கையிலேந்தி இல்லறத்தாரோடு கூடாதுறவி அவர்கள் தீய ஒழுக்கத்திலுங்கூடாது ஒழுகல் வேண்டுமென்பதை விளக்குகின்றார்.

1.வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்க
ளைந்து மகத்தே நகும்.

(ப.) வஞ்சமனத்தான் - மனதிற் கொடுஞ்செயலையே குடியாகக் கொண்டவன், படிற்றொழுக்கம் - அடங்கி செய்யுங் கொடுஞ்செயல்களுக்கு, பூதங்களைந்து - ஐம்பூதங்களும், மகத்தே - தன்னிற்றானே, நகும் - இடம் விட்டகலுமென்பது பதம்.

(பொ.) மனதிற் கொடுஞ் செயலையே குடியாகக் கொண்டவன் அடங்கிசெய்யுங் கொடுஞ் செயல்களுக்கு ஐம்பூதங்களும் இடம் விட்டுவிலகும் என்பது பொழிப்பு.

(க.) துறந்தும் வன்னெஞ்சமுடையவனாயின் அதுவே அவனது ஐம்பூதச்சேர்க்கையைப் பிரித்து ரணதுக்கத்துக் ஆளாக்கும் என்பது கருத்து.

(வி.) இல்லறப் பற்றுக்களை ஒழித்து துறவு பூண்டவன் தனதுள்ளப் பற்றாகிய வஞ்சினத்தைத் துறக்காது தீங்கு புரிவானாயின் அவ்வுள்ளக் கொதிப்பால் பஞ்ச பூதங்களின் சேர்க்கைகள் பிரிவுற்று மீளா துக்கத்திற்கு ஏதுவாம் மரணத்திற்கு ஆளாவான் என்பது விரிவு.

2.வானுயர் தோற்ற மெவன்செய்யுந் தன்னெஞ்சந்
தானறி குற்றப் படின்.

(ப.) தன்னெஞ்சந் - தனதுள்ளக் கொடுஞ்செயலை, தானறி - தானேதெரிந்து, குற்றப்படின் - தப்பென் றுணர்ந்தவன், வானுயர் - வானராட்சியமாம் வீடுபேற்றின், தோற்ற - சுகப்பார்வையை, மெவன் செய்யு - எவ்வகையிலடையக் கூடுமென்பது பதம்.

(பொ.) தனதுள்ளக் கொடுஞ்செயலைத் தானே தெரிந்து தப்பென்றுணர்ந்தவன் வானராட்சியமாம் வீடுபேற்றின் அகப்பார்வையை எவ்வகையால் அடையக்கூடும் என்பது பொழிப்பு.

(க.) துறவி தனது உள்ளத்தில் நின்றெழுங் கொடுஞ்செயலைத் தப்பென்றுணர்ந்தபின் வீடுபேறாம் நிருவாண சுகநிலையை எங்ஙனம் அடைவான் என்பது கருத்து.

(வி.) இல்லந்துறந்து துறவேறி பற்றற்ற நிருவாண நிலையை அடைய வேண்டியவன் தனதுள்ளப்பற்றாம் வஞ்சினச் செயலைத் தானே அகற்றாது குற்றமென்றறிந்தபின் அவனுக்கு நிருவாணநிலை தோற்றுமோ என்பது விரிவு.