பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/719

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 709

கிளர்ச்சியுற்று ஆதிதேவனுக் கொப்பனையாகக் கொண்டாடுவார்கள். ஆகலின் துறவு பூண்டோன் இறந்தானென்னும் பழித்தலுக்குள்ளாகாது ஜெயம் பெருவனேல் அன்றுமுதல் சிரமயிர் கழிக்கவேண்டுமென்றும், சடைமுடி வளர்க்கவேண்டுமென்றுங் கூறும் விதிகளற்றுப்போவான் என்பது விரிவு.

36. வெகுளாமெய்

தன்னைத்தூற்று மொழிகளை செவியிற் கேட்டவுடன் கோபம் எழுதலும் தனது சத்துருவைக் கண்ணிற் கண்டவுடன் கோபம் எழுதலுமாய இருவகைச் செயலினுந் தனதுள்ளத் தடக்கிவைத்தெழுவும் வெகுளியே உடலையும் உள்ளத்தையுங் கெடுத்து தான் துறவுசென்றுசேர்ந்த சங்கத்தின் பயனுமில்லாமற் போமாதலின் வெகுளாமெயின் சுகத்தையும், வெகுளுமெய்யின் கேட்டையும் விளக்கலானார்.

1.செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பா னல்லிடத்துக்
காக்கிலென் காவாக்க லென்.

(ப.) னல்லிடத்து - இல்லத் திருந்து, சினங்காப்பா - கோபத்தை யடக்க முயலுவோன், காக்கிலென் - அடக்கிலென், காவாக்காலென் அடக்காதுவிடிலென், செல்லிடத்து - துறவுபூண்டு சேர்ந்த சங்கத்திடத்து, காப்பான் - அடக்குவோனே மேலானவனென்பது பதம்.

(பொ.) இல்லத்திருந்து கோபத்தையடக்க முயலுவோன் அடக்கிலென் அடக்காதுவிடிலென், துறவுபூண்டு சேர்ந்த சங்கத்திடத்து அடக்குவோனே மேலோன் என்பது பொழிப்பு.

(க.) இல்லத்திலுள்ளோனுக்குக் கோபம் எழினும் எழாதுநிற்கினும் ஏனையோர் அவற்றைக் கருதமாட்டார்கள். சருவமுந்துறந்த சங்கத்தோனுக்குக் கோபம் எழுமாயின் கருதுவார்கள் ஆதலின் துறந்தோனே சினத்தைக் காக்கவேண்டும் என்பது கருத்து.

(வி.) இல்லந்துறந்து சங்கஞ் சேர்ந்த காரணம் இராகத்துவேஷ மோகம் என்னுங் காம, வெகுளி, மயக்கத்தை அகற்றற் கேயாதலின் தான் சென்ற சங்கத்திடத்து சினத்தைக் காத்தலே சிறப்பாம். இல்லத்தோன் தொல்லொத்தோனாதலின் அவன் சினத்தைக்காத்தான் காக்கவில்லையென நோக்குவதாற் பயனில்லை என்பது விரிவு.

2.செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்து
மில்லானிற் றீய பிற.

(ப.) செல்லாவிடத்து-இல்லந் துறவாதவனிடத்தும், சினந்தீது - கோபமடங்காவிடிற் கொடிதாம், செல்லிடத்து - சேர்ந்த சங்கத்திடத்து, மில்லதெனில் - அக்கோபமடங்காவிடின், றீயபிற - அதனினுங் கொடிய துன்பம் வேறில்லை என்பது பதம்.

(பொ.) இல்லந் துறவாதவனிடத்தும் கோபம் அடங்காவிடிற் கொடிதாம், சேர்ந்த சங்கத்திடத்து அக்கோபம் அடங்காவிடின் அதனினுங் கொடிய துன்பம் வேறில்லை என்பது பொழிப்பு.

(க.) இல்லத்தில் வாழ்வோனுக்கே கோபமெழுவில் அதனால் அவனடையுந் துக்கத்தைக் காண்கின்றோம். சாந்தத்தை நிறப்ப வேண்டுமென்று சங்கஞ் சேர்ந்துங்கோபத்தை அடக்கானாயின் அதனினுங் கொடியதுன்பம் வேறில்லை என்பது கருத்து.

(வி.) இல்லத்தில் வாழ்பவன் தொல்லத்தோனென்பது முதுமொழி ஆதலின் அவனுக்குக் கோபமெழுவி அடையுந்துக்கத்தைக்கண்டு பயந்து துறவுபூண்டு சங்கஞ்சேர்ந்தும் வெகுளியை அடக்காது மயக்கத்தில் அழுந்துவானாயின் இல்லத்தோனடையுந் துக்கத்தினுந் தீய துக்கத்தையடைவான் என்பது விரிவு.