பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/723

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 713


முள்ளது கண்டு அவாவென்னும் வித்தாகியப் பற்றுதலே பிறப்பதற்கு மூலமென்று கூறியுள்ளவற்றிற்குச் சார்பாய் இடைகாடர்” பற்றே பிறப்புண்டாக்கும் தாண்டவக்கோனே அதை பற்றாதறுத்துவிடு தாண்டவக்கோனே என்றும் “ஆசைக்கோரளவில்லை லகிமெல்லாங் கட்டி யாளினுங் கடன் மீதிலே” என சதகத்தோர் கூறியுள்ளவற்றிற்கும் பகரமாய் ஆசையென்னும் விதையே சருவ சீவர்களின் தோற்றத்திற்கும் ஏதுவாய் உள்ளதென்பது விரிவு.

2.வேண்டுங்கால் வேண்டும் பிறவாமெ மற்றது
வேண்டாமே வேண்ட வரும்.

(ப.) பிறவாமெ - மறுபடியும் பிறவா சுகநிலையை, வேண்டுங்கால் - உறுதிபெறக்கருதுங்கால், வேண்டும் - அவை விரும்பி நிற்கும், மற்றது - பிறக்குந் துக்கநிலை யானது, வேண்டாமெ - பிறவியினுருவை கருதாது, வேண்ட - அவாவைக்கருத, வரும் - வந்து தீருமென்பது பதம்.

(பொ.) மறுபடியும் பிறவா சுகநிலையை உறுதிபெறக்கருதுங்கால் அவை விரும்பி நிற்கும் பிறக்குந் துக்க நிலையானது பிறவியின் உருவை கருதாது அவாவைக் கருத வந்து தீரும் என்பது பொழிப்பு.

(க.) பிறவியின் துக்கத்தைப் போக்கிக் கொள்ளவேண்டுமென்னும் அவா மிகுத்தோனுக்கு சுகநிலை வந்தே கூடும் அவ்வகைய அவாவற்று உலக இன்பத்தை வேண்டுவோனுக்கு துக்கநிலை வந்தே தீரும் என்பது கருத்து.

(வி.) துறவு பூண்டவன் பிறப்பின் துக்கத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்னும் அவாவில் நிலைத்து பஞ்சபுலன்களின் செயலை அறிந்துக்கொள்ளுவதினால் தென்புலத்தோனாகி சுகநிலை பெறுவான், அங்ஙனந் துறவு பூண்டும் பிறவியின் துக்கத்தை நோக்காது பஞ்சபுலனின் இன்ப நுகர்ச்சியை வேண்டுவானாயின் பிறவியின் துக்கம் வந்தே தீரும் என்பது விரிவு.

3.வேண்டாமெ யன்ன விழுச்செல்வ மீண்டில்லை
யாண்டு மஃதொப்ப தில்.

(ப.) வேண்டாமெ - புலன்வழியா யுண்டாமின்பத்தை நாடாதும், யன்ன - அதனை கருதாதுமாய, விழுச்செல்வ - அழியாச்செல்வம், மீண்டில்லை - வேறொன்றுங்கிடையா, யாண்டு - இப்போதுமெப்போதும், மஃதொப்பதில் - அதற்கு நிகராயதொன்றில்லை என்பது பதம்.

(பொ.) புலன் வழியால் உண்டாம் இன்பத்தை நாடாதும் அதனை கருதாதுமாய அழியாச்செல்வம் வேறொன்றுங் கிடையா இப்போதும் எப்போதும், அதற்கு நிகராயது ஒன்றில்லை என்பது பொழிப்பு.

(க.) துறவியானவன் அவாவற்ற வாழ்க்கையே அழியாச்செல்வமென்றும் அதற்கு நிகராய இன்பம் வேறொன்றுமில்லை என்பது கருத்து.

(வி.) துறவுபூண்டு சங்கஞ்சேர்ந்துள்ள சிரமணனுக்கு உலக இன்பத்தில் இச்சையும் அவிச்சையுமற்று ஆனந்தித்திருப்பதே அழியாச் செல்வத்திற்கு ஒப்பாவதுடன் அதற்கு ஒப்பிட்டுக் கூறுவதற்கும் வேறு பொருள் கிடையாது என்பது விரிவு.

4.தூஉய்மெ யென்பத வாவின் மெ மற்றுது
வாஅய்மெ வேண்ட வரும்.

(ப.) தூஉய்மெ - சுத்ததேகி, யென்ப - என்று சொல்லும்படியானது, தவாவின்மெ - ஆசையற்றவனாதல், மற்றது - மற்றுமதற்கு உதவியோயென்னில், வாஅய்மெ - நான்கு வகை சத்தியமொழிகளை, வேண்ட- கருத, வரும் - வந்து தீரும் என்பது பதம்.

(பொ.) சுத்த தேகியென்று சொல்லும் படியானது ஆசையற்றவனாதல், மற்றும் அதற்கு உதவியோ வென்னில் நான்கு வகைசத்தியமொழிகளைக் கருத வந்து தீரும் என்பது பொழிப்பு.