பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/744

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

734 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(வி.) இவற்றையே அரண்காப்பு என்றும் கோட்டை மதிலென்றுங் கூறப்படும். நாட்டுக்கு ஆதாரமாம் நகரத்திற்கு கோட்டையின் மதிலே காப்பு ஆதலின் அவை அகலமாகவும் உயரமாகவும் சாந்துமைகூட்டிய உறுதியாகவும் அழகிய வெண்தூளிதம் பூசியதாகவும் இருக்கவேண்டும் என்பது சிற்ப நூலின் குறிப்பு என்பது விரிவு.

4.சிறுகாப்பிற் பேரிடத்த தாகி யுறுபகை
யூக்க மழிப்ப தரண்.

(ப.) சிறுகாப்பிற் - சிறியக்காப்பாளராயினும், பேரிடத்ததாகி விசாலமுற்றயிடமுடையதாய், யுறுபகை - தங்களையெதிர்த்துவரும் பகைவரின், யூக்க மழிப்ப - மனேவுற்சாகத்தைக் கெடுக்கக்கூடியதே, தரண் - நகரமென்னப்படு மென்பது பதம்.

(பொ.) சிறிய காப்பாளராயினும் விசாலமுற்ற இடமுடையதாய் தங்களை எதிர்த்து வரும் பகைவரின் மனோ உற்சாகத்தைக் கெடுக்கக்கூடியதே நகரமென்னப் படும் என்பது பொழிப்பு.

(க.) சிறிய படையால் காக்கக்கூடியதாயினும் கோட்டையானது விசாலமும் உறுதியும் பெற்றிருப்பதே எதிரியின் மனோ உற்சாகத்தைக் கெடுப்பதற்கு ஆதாரமாயுள்ள அரணெனத் தகும் என்பது கருத்து.

(வி.) நகரக்கோட்டையானது விசாலமும் உறுதியும் பெற்றிருக்குமாயின் சிறு படையைக் கொண்டே எதிர்நோக்கி வரும் பெரும்படையின் உற்சாகத்தைக் கெடுத்துப் பின்போகச் செய்யும் என்பது விரிவு.

5.கொளற்கரிதாய்க் கொண்ட கூழ்த்தாகி யகத்தார்
நிலைக்கெளிதா நீர தரண்.

(ப.) கொளற்கரிதாய்க் - எதிரி யெளிதிற் கைப்பற்றக் கூடாததாகவும், கொண்ட கூழ்த்தாகி - வேணவுணவு பொருள் நிறப்புதற் கிடமாகவும், யகத்தார் - நகரவாசிகள், நிலைக்கெளிதா - பயமின்றி தங்கியிருப்பதற்காதாரமாகவும், நீரதரண் - நேர்ந்திருப்பதே கொத்தள மென்னப்படு மென்பது பதம்.

(பொ.) எதிரி எளிதிற் கைப்பற்றக் கூடாததாகவும் வேணவுணவு பொருள் நிறப்புதற்கு இடமாகவும் நகரவாசிகள் பயமின்றி தங்கியிருப்பதற்கு ஆதாரமாகவும் நேர்ந்திருப்பதே கொத்தளமென்னப்படும் என்பது பொழிப்பு.

(க.) எதிரி படையால் உடனுக்குடன் கைப்பற்றக்கூடாததும் பலவகைத் தானியங்களை ஏராளமாக நிறப்பி வைப்பதற்கு இடமாகவும், நகரவாசிகள் ஏதொரு பயமுமின்றி நிலைத்திருப்பதற்கு விடுதிகளாகவும் அமையப் பெற்றுள்ளதே அரயன் வாழ் நகரமெனத் தகும் என்பது கருத்து.

(வி.) நகரத்திற்கு ஆதாரமாயக் கோட்டையின் கட்டிடமானது எதிரி அரசர்களால் எளிதாகக் கைப்பற்றக்கூடாததாகவும் எத்தனை காலம் யுத்தம் நடப்பினும் உணவு பொருளில்லை என்னாது நிறப்பி வைத்தற்கு இடமாகவும் எவ்வகை யுத்த நடப்பினும் அவ்விடம் வசித்துள்ளக் குடிகளுக்கு பயமின்றி வாசஞ்செய்யும் இருக்கைகளாகவும் அரணமைந்திருத்தல் வேண்டும் என்பது விரிவு.

6.எல்லாப் பொருளு முடைத்தா யிடத்துதவு
நல்லா ளுடைய தரண்.

(ப.) எல்லாப்பொருளு - அரசனுக்கு வேண்டிய சகல பொருட்களும், முடைத்தா - உடையதாகி, அவ்விடத்தே நிறைந்திருப்பதுடன், நல்லா - ஒழுக்கமுற்ற வரணியும், ளுடைய - உடையதே, தரண் - அரண்மனையென்னும், யிடத்துதவு - இடத்திற்குப் பலமாமென்பது பதம்.

(பொ.) அரசனுக்கு வேண்டிய சகல பொருட்களும் உடையதாகி அவ்விடம் நிறைந்திருப்பதுடன் ஒழுக்கமுற்ற அரணியும் உடையதே அரண்மனை என்னும் இடத்திற்கு பலமாம் என்பது பொழிப்பு.

(க.) அரயனுக்கு வேண்டும் பலவகையாய பொருட்களும் ஒழுக்கமும் விவேகமு மிகுத்த நல்மனையாளும் இருப்பதே அரணுக்காதாரமாம் என்பது கருத்து.