பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/745

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 735


(வி.) ஒரில்லத்தில் நல்லாளாம் ஒழுக்கமிகுத்த மனைவி இருப்பாளாயின் சகல பொருட்களும் உண்டென்பது போல் அரயனுக்கு சகலவகைப் பொருட்களிருப்பினும் நீதியும் ஒழுக்கமுமற்ற மனையாள் இருப்பாளாயின் சகல பொருட்களிருந்தும் இல்லையென்னப்படுதலால் அரண்மனைக்கு அதிபனாம் அரயனுக்கு சகலமாய பொருட்களோடு நல்லாளாம் உத்தம மனையாளும் இருப்பாளாயின் அரணுக்குப் பலமாம் என்பது விரிவு.

7.முற்றியு முற்றா தெறிந்து மறைப்படுத்தும்
பற்றற் கரிய தரண்.

(ப.) முற்றியு - கோட்டையை பகைவரால் முற்றிகை இடினும், முற்றாதெறிந்து - அவ்வகை முற்றிகை இடாது ஆயுதங்களை எறியினும், மறைப்படுத்தும் - காக்கக் கூடியதும், பற்றற்கரிய - பகைவரால் கைப்பற்றுதற் கரிதாயதுமே, தரண் - நகரமென்னப்படும் என்பது பதம்.

(பொ.) கோட்டையை பகைவரால் முற்றிகை இடினும் அவ்வகை முற்றிகை இடாது ஆயுதங்களை எறியினும் காக்கக் கூடியதும் பகைவரால் கைப்பற்றுதற்கு அரிதாயதுமே நகரமென்னப்படும் என்பது பொழிப்பு.

(க.) பகைவர் கோட்டைவாயலை நெருங்கி வந்து முற்றிகையிடினும் முற்றிகையிடாது வெளியிலிருந்தே ஆயுதங்களைப் பிரயோகிக்கினும் உள்ளிருப்போரை மறைத்துக்காக்கக்கூடியதும் பகைவரால் கைப்பற்றக் கூடாததுமாய் இருப்பதே அரணென்னப்படும் என்பது கருத்து.

(வி.) கோட்டையை நெருங்கி விட்டோமென்னும் பகைவரது அடையாளமாம் முற்றிகையிடினும் அவ்வகை முற்றிகையிடாது வெளியிலிருந்துக்கொண்டே ஆயுதங்களை யெறியினும் கோட்டைக் குள்ளிருப்போர் அவைகள் யாவற்றிற்கும் அஞ்சாதிருக்கவும் எதிரிகள் எளிதிற் கைப்பற்றக் கூடாததுமாயிருப்பதே மதிலரணென்றும் நகரமென்றுங் கூறத்தகும் என்பது விரிவு.

8.முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றி யார்வெல்வ தரண்.

(ப.) முற்றாற்றி - பகைவராலிட்ட முற்றிகையை யகற்றியும், முற்றியவரையும் - முற்றிகையிட்டப் பகைவரையும், பற்றாற்றி - கைப்பற்றி, பற்றியார் - வீரமுறுவோர், வெல்வ - வெல்லுவதற்காதாரமாயிருக்க வேண்டியது, தரண் - நகரக்கோட்டை யென்பது பதம்.

(பொ.) பகைவராலிட்ட முற்றிகையை அகற்றியும் முற்றிகை இட்டப் பகைவரையுங் கைப்பற்றி வீரமுறுவோர் வெல்லுவதற்கு ஆதாரமாய் இருக்க வேண்டியது நகரக்கோட்டை என்பது பொழிப்பு.

(க.) பகைவர் முற்றிகையை உடைக்கக் கூடியதும் அவர்களைக் கைப்பற்றி அடக்கக் கூடியவர்களுமாய சுத்த வீரர்களுக்கு வசதியாகவும் அக்கோட்டையின் அரண் அமைந்திருக்க வேண்டும் என்பது கருத்து.

(வி.) அரயனுக்குக் காப்பாக விளங்கும் சுத்த வீரர்கள் எதிரிகளின் முற்றிகையை அடைக்கவும் அவ்வெதிரிகளைக் கைப்பற்றவுங் கூடிய உபாயத்தில் அமைந்திருக்க வேண்டியது அவ்வரண் என்பது விரிவு.

9.முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீரெய்தி மாண்ட தரண்.

(ப.) முனைமுகத்து - முனிந்து செய்யும் யுத்தத்தில், மாற்றலர்சாய - பகைவர் மடிய, வினைமுகத்து - முந்திய செயலால், வீரெய்தி - மேலு மேலும் சுத்த வீரமுண்டாக, மாண்ட - முடிந்திருக்க வேண்டியது, தரண் - கொத்தளமென்பது பதம்.

(பொ.) முனிந்து செய்யும் யுத்தத்தில் பகைவர் மடிய முந்திய செயலால் மேலும் மேலும் சுத்த வீரமுண்டாக முடிந்திருக்க வேண்டியது கொத்தளம் என்பது பொழிப்பு.