பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/752

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

742 / அயோத்திதாசர் சிந்தனைகள்

கற்றார் - தேர்ந்தோர் முன்பு, கல்லாதார் - கற்றுத் தேராதவர்கள், கடையரே - விலகி நிற்போரே யாவரென்பது பதம்.

(பொ.) செல்வமுடையோர் முன்னிலையில் செல்வமில்லாதார் நிலையாததுபோல கல்வியைக் கசடறக் கற்று தேர்ந்தோர் முன்பு கற்றுத் தேராதவர்கள் விலகி நிற்போரே யாவார் என்பது பொழிப்பு.

(க.) தனவந்தர்கள் முன்னிலையில் ஏழைகள் விலகி நிற்பதுபோல கற்றவர்கள் முன்னிலையில் கல்லார் விலகியே நிற்பார்கள் என்பது கருத்து.

(வி.) ஈட்டி எட்டியவரையிற் பாயும் பணம் பாதாளம் வரையிலும் பாயுமென்னும் பழமொழிக்கு ஒக்க தனமுடையோன் மனிதனேயாயினும் மனிதன் மனிதனுக்கு அஞ்சாது அவனிடமுள்ள பணத்திற்கு அஞ்சி விலகி நிற்பதுபோல, கற்றவன் மனிதனேயாயினும் அவனுக்குள்ளக் கல்வியின் சிறப்பையும் அதன் மகத்துவத்தையுங் கண்டு கல்லாதோர் விலகியே நிற்பார் என்பது விரிவு.

6.தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறு மறிவு.

(ப.) மணற்கேணி - மணற்பாங்குள்ள பூமியை, தொட்டனைத் - தூறு தோண்ட தோண்ட நீர்பெருகுவதுபோல், மாந்தர்க்கு - மக்களுக்கு, கற்றனைத் தூறு - கற்கக் கற்கப்பெருகும், மறிவு - ஞானமென்பது பதம்.

(பொ.) மணற்பாங்குள்ள பூமியை தோண்ட தோண்ட நீர்பெருகுவது போல மக்களுக்கு கற்கக் கற்கப் பெருகும் ஞானம் என்பது பொழிப்பு.

(க.) மணலுள்ள பூமியிற் பள்ளம்பரிக்கப் பரிக்க நீர் சுறப்பதுபோல் விசாரிணை மிகுத்த மக்களுக்கு கல்வியை கற்கக்கற்க விவேகம் விருத்திப்பெறும் என்பது கருத்து.

(வி.) மக்களுக்குள் கல்வி கற்றலில் ஊக்கமும் விசாரிணையும் மிகுத்திருப்பார்களாயின் பேரானந்த ஞானோதயமாம் என்பதற்கு உபமானமாக மணலுள்ள பூமியைத் தோண்டத் தோண்ட நீர் சுரக்குமெனக் கூறிய விரிவாம்.

7.யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.

(ப.) லென்னொருவன் - எவனொருவன், கல்லாதவாறு - கல்வியைக் கற்காதிருக்கின்றானோ, சாந்துணையுங் - அவன் மரண பரியந்தம், யாதானு - ஏதொன்றை, நாடாமா - நாடினு மவைக் கிட்டாமலும், லுராமா - அதன் சுகத்தை யநுபவிக்காமலுமே போவன் என்பது பதம்.

(பொ.) எவனொருவன் கல்வியைக் கற்காதிருக்கின்றானோ அவன் மரண பரியந்தம் ஏதொன்றை நாடினும் அவைக் கிட்டாமலும் அதன் சுகத்தை அநுபவிக்காமலுமே போவன் என்பது பொழிப்பு.

(க.) கல்வியைக் கல்லாத ஒருவன் ஏதொன்றை நாடினும் அவன் மரிக்குமளவும் அதன் சுகத்தை அடையானென்பது கருத்து.

(வி.) கல்லாதவனது நிலை சொல்லாமலே அவன் செயலால் விளங்குதலால் ஏதொன்றை நாடினும் மரணபரியந்தம் அதன் சுகம் ஊராமலே போவன் என்பது விரிவு.

8.ஒருமெக்கட் டான்கற்ற கல்வி யொருவற்
கெழுமெயு மேமாப் புடைத்து.

(ப.) ஒருமெக்கட் - எடுத்துள்ள வோர் தேகத்தில், டான்கற்ற - தான் கற்றுத் தேர்ந்த, கல்வி - கலை நூலின் பயனாயது, யொருவன் - அவனது, கெழுமெயு - எழுவகைப் பிறப்பையும், மேமாப் - களங்கமறத் தெரிந்துக் கொள்ளற்கு, புடைத்து - உடையதாகுமென்பது பதம்.

(பொ.) எடுத்துள்ள ஓர் தேகத்தில் தான் கற்றுத்தேர்ந்த கலைநூலின் பயனாயது அவனது எழுவகைப் பிறப்பையும் களங்கமறத் தெரிந்துக்கொள்ளற்கு உடையதாகும் என்பது பொழிப்பு.