பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/759

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 749


5.இழுக்க லுடையுழி யூற்றுக்கோ லற்றே
யொழுக்க முடையார்வாய் சொல்.

(ப.) இழுக்கலுடையுழி - நோயின் துன்பநிலை, யொழுக்கமுடையார் - சமணமுநிவர்களது, வாய்சொல் - நாவினின் றெழூஉம்வார்த்தையைக் கொண்டு, யூற்றுக்கோ - உலோக வூற்றினால், லற்றே - நீங்குவதே கேள்வியின் பயனென்பது பதம்.

(பொ.) நோயின் துன்பநிலை சமணமுநிவர்களது நாவினின்று எழூஉம் வார்த்தையைக் கொண்டே உலோக ஊற்றினால் நீங்குவதே கேள்வியின் பயனென்பது பொழிப்பு.

(க.) ஒழுக்கமிகுத்த சமணமுநிவர்களின் வாய்மொழிக் கேட்டு அக்கேள்வியில் முயல்வோர் கல்வி கல்லாரேயாயினும் லோக ஊற்றின் பயனை ஒக்கப் பல துன்பங்களினின்றும் நீங்குவார்கள் என்பது கருத்து.

(வி.) “ஆர்கலி யுலகத்து மக்கட்கெல்லாம் ஓதலி நன்றே வொழுக்கமுடைமெய்" என்னும் பௌத்தர்களது நீதி நூலின்படி கல்வியை ஓதாதார்களாயினும் சமண முநிவர்களது வாய்மொழி கேட்டு அவ்வொழுக்கத்தில் நடப்போர் சனிநீர் என்னும் சனிக்கும் உலோக ஊற்றில் குளிப்போர் சகலவியாதிகளும் நீங்கி சுகம் பெறுவார்கள் என்னும் வாய்மொழி கேட்டு அவ்வழி நடந்தோர் சுகமடைவதுபோல கல்லாரேயாயினும் ஒழுக்க மிகுத்துள்ளோர் கேள்வியில் முயன்று ஒழுகுவாராயின் செவியாற் கேட்டலின் பயன் செவ்வனே விளங்குவது கண்ட நாயன் கேட்டுத் தெளிதலின் செயலை விளங்கக் கூறிய விரிவு.

6.எனைத்தானு நல்லவை கேட்க வனைத்தானு
மான்ற பெருமெ தரும்.

(ப.) எனைத்தானு - எத்தகையோனாயினும், நல்லவை - நன்னீதிகளை, கேட்க - கேட்டுணர்வானாயின், வனைத்தானும் - கேட்ட அவ்வளவும், மான்ற - மேலாய, பெருமெதரும் - சிறப்பைக்கொடுக்கு மென்பது பதம்.

(பொ.) எத்தகையோனாயினும் நன்னீதிகளைக் கேட்டுத் தெளிவானாயின் கேட்ட அவ்வளவும் மேலாய சிறப்பைக் கொடுக்கும் என்பது பொழிப்பு.

(க.) கல்லாதவனாயினும் சமணமுநிவர்களையடுத்து அறவுரைக் கேட்டுணர்வானாயின் அக்கேள்வியின் பயனே அவனை மேலாய சிறப்படையச் செய்விக்கும் என்பது கருத்து.

(வி.) பொய்யுரைகூறி பொருள் பறித்து உண்ணுங் காரிய குருக்களை அணுகாது மெய்யுரை கூறி மக்கள் ஈடேற்றத்தை நோக்கிநிற்கும் சமணமுநிவர்களாம் காரண குருக்களை அணுகுங் கல்லாதவனாயினும் அவர்களது அறநெறிக்கேள்வியால் சுகமுற்று மேலாய சிறப்பைப் பெருவான் என்பது விரிவு.

7.பிழைத்துணர்ந்தும் பேதைமெ சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.

(ப.) ரிழைத்துணர்ந் - ஒத்துவுணர்வால், தீண்டிய - பெற்ற கேள்வியவர் - அறவுரைக்கேள்வியால், பிழைத்துணர்ந்தும் - தாங்கள் சுகசீவியம் பெறுவதுடன், பேதெமெ சொல்லா - அறிவிலி மொழிகளையும் பேசார்களென்பது பதம்.

(பொ.) ஒத்தவுணர்வால் பெற்ற அறவுரைக்கேள்வியால் தாங்கள் சுகசீவியம் பெறுவதுடன் அறிவிலி மொழிகளையும் பேசார்கள் என்பது பொழிப்பு.

(க.) சமணமுநிவர்களது அறநெறி போதத்தைக்கேட்டுத் தெளிந்து சுகமுற்றவர்கள் ஒருவரையும் மனங்குன்றப் பேசார்கள் என்பது கருத்து.

(வி.) கல்லாதவர்களேயாயினும் மேலோர்களது அறநெறிகளைக் கேட்டுத் தெளிந்து சுகவாழ்க்கையிலிருப்பவர்கள் தங்கள் நாவினால் எவரையும் மனநோகப் பேசமாட்டார்கள் என்பது விரிவு.