பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/766

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

756 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(வி.) நெருப்பினது முன்னிலிட்ட சிறுச்செடி கூளங்கள் எரிந்து பூண்டற்று போவதுபோல அரசன் தனது குற்றத்தால் தோன்றி எழூஉங் கேடுகள் தீதென்று அறிந்தும் அவற்றைத் தடுத்துக் கொள்ளாது போவானாயின் தனது வாழ்க்கை சுகமும் ஒழிந்து குடும்பமும் அழிந்து கேடடைவான் என்பது விரிவு.

6.தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பி
னென்குற்ற மாகு மிறைக்கு.

(ப.) தன்குற்ற - தனது கொடுஞ் செயல்களை, நீக்கி - அகற்றி, பிறர்குற்றங் - அன்னியர்களது கொடுஞ்செயல்களை, காண்கிற்பி - பின்பு நோக்குவதாயின், மிறைக்கு - அரசனுக்கு, னென்குற்றமாகு - ஏது பழியுண்டாமென்பது பதம்.

(பொ.) தனது கொடுஞ்செயல்களை அகற்றி அன்னியர்களது கொடுஞ் செயல்களை பின்பு நோக்குவதாயின் அரசனுக்கு ஏது பழியுண்டாம் என்பது பொழிப்பு.

(க.) அரசன் தனது குற்றச்செயல்களை அகற்றிவிட்டு பின்பு பிறர் குற்றச்செயல்களை அகற்ற முயலுவானாயின் யாதொரு பழியும் வாரா என்பது கருத்து.

(வி.) அரசனானவன் தனது ஆளுகையில் தானோர் குற்றச்செயல்களுக்கு ஆளாகாது அகற்றி பிறரது குற்றங்களைக் கண்டு தெண்டித்தும் அகற்றுவானாயின் யாதொரு பழி பாவங்களும் நேராது என்பது விரிவு.

7.செயற்பால செய்யா திவறியான் செய்வ
முயற்பால தன்றி கெடும்.

(ப.) செயற்பால - குற்றமற செய்யவேண்டிய காரியங்களை, செய்யா - செய்யாத, திவறியான் - முன்னாலோசனையற்றவன், செய்வ - செய்யும்படியானக் காரியங்கள் யாவும், முயற்பாலதன்றி - ஒருவர் கெடுப்பாரின்றி, கெடும் - தானே யழிந்து போமென்பது பதம்.

(பொ.) குற்றமறச் செய்யவேண்டிய காரியங்களைச் செய்யாத முன்னாலோசனை அற்றவன் செய்யும்படியானக் காரியங்கள்யாவும் ஒருவர் கெடுப்பாரின்றி தானே அழிந்துபோம் என்பது பொழிப்பு.

(க.) அரசனானவன் ஏதொரு குற்றமும் அணுகாது முன்பு ஆலோசித்து ஓர் காரியத்தை நடத்தாவிடின் அஃது ஒருவரால் கெடுக்காமலே தானே கெட்டுப்போம் என்பது கருத்து.

(வி.) அரசனானவன் தான் செய்ய வேண்டிய காரியங்கள் யாவற்றினும் குற்றமாம் பழி பாவங்களணுகாது முன்பின்பு ஆலோசித்து செய்தலே அழகாம். அங்ஙனம் முன்பின்பு ஆலோசியாது குற்றங்கூறச் செய்துக் கொள்ளுவானாயின் அக்காரியங்கெடுதற்கு ஏதொருவருமின்றி தானே அழிந்து போம் என்பது விரிவு.

8.பற்றுள்ளமென்னு மிவரன்மெ யெற்றுள்ளு
மெண்ணப் படுவதொன் றன்று.

(ப.) பற்றுள்ளமென்னு - குற்றப்பற்றுள்ளோமென்னு, மிவரன்மெ - தங்களது செயல், யெற்றுள்ளு - ஏனையோருள்ளத்திலு முள்ளதென்று, எண்ணப்படுவ - நினைப்பது, தொன்றன்று - ஓரெண்ணமாகாதென்பது பதம்.

(பொ.) குற்றப்பற்றுள்ளோம் என்னுந் தங்களதுச் செயல் ஏனையோர் உள்ளத்திலும் உள்ளதென்று நினைப்பது ஓர் எண்ணமாகாது என்பது பொழிப்பு.

(க.) தங்களுக்குள்ளக் குற்றமாயப் பற்றுக்கள் யாவும் ஏனை யோரிடத்திலும் உண்டென்னுமோர் எண்ணம் சரியான எண்ணமாகாது என்பது கருத்து.

(வி.) தங்களுள்ளத்தின்கண் காமகுற்றம், கோபகுற்றம், லோபகுற்றமாய பற்றுக்களை நிறப்பிக்கொண்டு ஏனையோரிடத்தும் இக்குற்றப் பற்றுக்கள் உண்டென்னுமோர் எண்ணங் கொள்ளுதல் ஆகாதென்பது விரிவு.