பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/783

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 773

கழுத்தில் கயிறிட்டு தாங்களே சுறுக்கிட்டுக் கொள்ளுவது போலாம் என்பதுகருத்து.

(வி.) புருவமென்னும் பிறை வளர்வது போலும் பிறை தேய்வதுபோலும் தொடுக்கு முயற்சிகள் சகலமுங் கூடிவருவதும் சிலது மாறுபட்டு குறைந்து வருவதும் இயல்பாம். இவற்றுள் கூடிவருங் காரியத்தில் முயன்று செய்வதாயின் சித்தியுண்டாம். மாறுபட்டு குறைவுபடுங்காலத்தில் முயல்வதாயின் சித்தியில்லாமற்போம். ஆதலின் அரசன் பருவமாகிய விருத்தி காலத்தையும் அமரமாகிய குறைவு காலத்தையுங் கண்டுணராது ஓர் காரியத்தில் முயல்வானாயின் கயிற்றினால் தன் கழுத்தை தானே சுறுக்கிட்டுக் கொள்ளுவதற்கு ஒக்கும் என்பது விரிவு.

3.அருவினை யென்வுளவோ கருவியாற்
கால மறிந்து செயின்.

(ப.) கருவியாற் - தனது முயற்சியால், காலமறிந்து - அந்தந்த காலநிலையறிந்து, செயின் - அரசனோர் காரியத்தைத் தொடங்குவானாயின், அருவினை - முடியாத காரியம், யென்ப - என்று சொல்லும்படியானவை, வுளவோ - உளதோ வென்பது பதம்.

(பொ.) தனது முயற்சியால் அந்தந்த காலநிலையறிந்து அரசனோர் காரியத்தைத் தொடங்குவானாயின் முடியாத காரியமென்று சொல்லும் படியானவை உள்ளதோ என்பது பொழிப்பு.

(க.) அரசன் அந்தந்த கால பருவம் அறிந்து காரியத்தைத் தொடங்குவானாயின் முடியாத காரியம் ஒன்றுண்டோ , இல்லை என்பது கருத்து.

(வி.) அரசனானவன் காலமறிந்து காரியத்தைத் தொடங்குவானாயின் முடியக் கூடாத அரிய காரியமாயினும் முடித்தே தீருவான் என்பது விரிவு.

4.ஞாலங் கருதினுங் கைகூடுங் காலங்
கருதி யிடத்தாற் செயின்.

(ப.) காலங்கருதி - அந்தந்த காலத்தை யநுசரித்து, யிடத்தாற் - தன்னிட வலி கொண்டு, செயின் - காரியத்தைத் தொடங்குவானாயின், ஞாலங்கருதினும் - பூமியை முழுவதுமாள வெண்ணினும், கைகூடும் - அஃதமையுமென்பது பதம்.

(பொ.) அந்தந்த காலத்தை அநுசரித்து தன்னிட வலிகொண்டு காரியத்தைத் தொடங்குவானாயின் பூமியை முழுதும் ஆள எண்ணினும் அஃதமையும் என்பது பொழிப்பு.

(க.) அரசன் காலபலமறிந்தும் இடபலமறிந்தும் எடுத்த முயற்சியில் முயன்று தேசமுழுவதும் ஆள எண்ணினும் அவை கைக்கூடும் என்பது கருத்து.

(வி.) அரசனானவன் எடுக்குங் காரிய காலபலமறிந்தும் தனதிடபலமாம் தன்பலந் தனது சதுரங்கசேனைபலம், தானிய பண்டிபலம், ஆயுதசாலைபலம், அரசவங்கத்தோர்பலம் யாவையுஞ் சரிபடத்திறுத்தி பூமி முழுவதையும் ஆளுதற்கு எண்ணினும் அவ்வெண்ணம் முடியும் என்பது விரிவு.

5.காலங் கருதி யிருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்.

(ப.) ஞாலங் - பூமி முழுவதையும், கருதுபவர் - ஆளும்படியாக வெண்ணுவோர், கலங்காது - யாதொன்றுக்கு மஞ்சாது, காலங் - அதற்குரிய காலத்தின்பேறில், கருதி - எண்ணம் வைத்து, யிருப்பர் - கார்த்திருப்பார்களென்பது பதம்.

(பொ.) பூமிமுழுவதையும் ஆளும்படியாக எண்ணுவோர் யாதொன்றுக்கும் அஞ்சாது அதற்குரிய காலத்தின்பேரில் எண்ணம் வைத்துக் கார்த்திருப்பார்கள் என்பது பொழிப்பு.

(க.) யாதொன்றுக்கும் அஞ்சா அரசன் பூமி முழுவதையும் ஆளும்படியான எண்ணத்தைக் கொள்ளினும் அதற்குரிய காலத்தையே கருதி இருப்பான் என்பது கருத்து.