பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/791

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 781


(க.) தன்னை உயர்த்திக் கொள்ளற்குந் தாழ்த்திக்கொள்ளற்கும் தங்கடங்கள் செயல்களே என்பதை கல்லின்மீது எழுத்தைப்போல் எண்ணவேண்டும் என்பது கருத்து.

(வி.) அரசனானவன் தெரிந்து தெளிதற்குத் தானே காரணன் ஆதலின் தம்மெயுயர்த்திக் கொள்ளற்குந் தாமே காரணன் என்பது கல்லின் மீதெழுத்துப் போலுள்ளதால் சகலவற்றையுந் தெளிந்து செய்யல் வேண்டும் என்பது விரிவு.

6.அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர்
பற்றிலர் தாணார் பழி.

(ப.) அற்றாரை - சகல பற்றுக்களு மற்று நீதிநெறியமைந்த மேலோரை நேசித்து, தேறுத - அவர்பால் தெரிந்து தெளிதலை, வோம்புக - விரும்பல் வேண்டும், மற்றவர் - வேறு சிலராய, பற்றிலர் - நீதிநெறியிற் பற்றில்லாதவர்களோ, பழி - நிந்தனைக்கு, நாணார் - வெட்கமடையாரென்பது பதம்.

(பொ.) சகல பற்றுக்களுமற்று நீதி நெறி அமைந்த மேலோரை நேசித்து அவர்பால் தெரிந்து தெளிதலை விரும்பல் வேண்டும், வேறு சிலராய நீதிநெறி பற்றில்லாதவர்களோ நிந்தனைக்கு வெட்கம் அடையார்கள் என்பது பொழிப்பு.

(க.) நீதிநெறியிற் பற்றுள்ள மேலோரை நேசிக்கில் தெளிவுண்டாம், நீதிநெறியற்றவர்களை நேசிக்கில் பழிபாவத்திற்கு அஞ்சாதும் நாணமற்றும் அடுத்தோரைக் கெடுப்பார்கள் என்பது கருத்து.

(வி.) நீதிநெறியிற் பற்றுண்டாய் ஏனைய பற்றுக்கள் யாவும் அற்றுள்ள மேலோரைநோக்கில் தெளிவுண்டாகும் மதியூகமளிப்பர். நீதிநெறியிற் பற்றில்லாது சகல பற்றும் அமைந்துள்ள கீழோரை நேசிக்கில் பழிக்கும் நாணத்திற்கும் அஞ்சாது தெளிவற்ற நிலையில் விடுத்து பாழ்படுத்தி விடுவார்கள் என்பது விரிவு.

7.காதன்மெ கந்தா வறிவறியார்த் தேறுதல்
பேதைமெ யெல்லாந் தரும்.

(ப.) காதன்மெ - காமியபற்றுற்றோர், கந்தா - அதையே முகந்து நிற்பராதலின், அறிவறியார் - அவர்கள் தெளிவினிலையறியார், தேறுதல் - அவர்களை யடுத்துத் தெளிய வேண்டுமாயின், பேதைமெ - அறிவிலிச் செயலுக்குரிய, யெல்லாந்தரும் - சகல கேடுகளையுங் கொடுக்குமென்பது பதம்.

(பொ.) காமியபற்றுற்றோர் அதையே முகர்ந்து நிற்பராதலின் அவர்கள் தெளிவினிலை அறியார். அவர்களை அடுத்துத் தெளியவேண்டுமாயின் அறிவிலிச் செயலுக்குரிய சகல கேடுகளையுங் கொடுக்கும் என்பது பொழிப்பு.

(க.) காமியப்பற்று மிகுத்தோர் அதையே நுகர்ந்து நிற்போராகலின் அவர்களைத் தெளிவுற அடுத்தல் கேட்டிற்கே வழியாம் என்பது கருத்து.

(வி.) எவற்றானுந் தன்னை ஆய்ந்து தெளிதற்கு சற்று பேதமெயுற்றவன் காமியப்பற்று மிகுத்தோனை அடுத்துத் தெளிய முயல்வானாயின் மேலும் மேலும் பேதைமெயுற்று அல்லலடைவான் என்பது விரிவு.

8.தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா விடும்பை தரும்.

(ப.) தேரான் - தன்னிற்றானே சற்றுந் தெளிவில்லாதவன், பிறனை - அன்னியனை யடுத்தே, தெளிந்தான் - தெளிவதாயின், வழிமுறை - தனது குலமரபிற்கு, தீராவிடும்பை - மீளா துக்கத்தை, தரும் - கொடுக்குமென்பது பதம்.

(பொ.) தன்னிற்றானே சற்றுந் தெளிவில்லாதவன் அன்னியனை அடுத்தே தெளிவதாயின் தனது குலமரபிற்கு மீளா துக்கத்தை கொடுக்கும் என்பது பொழிப்பு.

(க.) தான் தானே தெளிவுறாது ஏனையோரால் தெளிவுற முயல்வது மனுகுலவரம்பிற்கே வழுவாம் என்பது கருத்து.