பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 83


பின்கலை நிகண்டு

மக்கட்பெயர் - மிலேச்சராரியர்

இத்தகைய மிலைச்சரென்றும் மிலேச்சர் என்றும் ஆரியர் என்றும் வழங்கிவந்த ஓர் கூட்டத்தார் யாசக சீவனத்தால் குமானிடர் தேசத்தைவிட்டுப் பரவி பலவிடங்களிலுஞ்சென்று அவரவர்களுக்குத் தக்க ஆரியக்கூத்தாடிக் காரியத்தின் பேரில் கண்ணாய் இத்தேசத்துக்குடிகள் யாவரும் ஒழுக்கத்திலுஞ் சீலத்திலும் மிகுத்தவர்களாய் ஒற்றுமெயுற்று வாழ்வதையும் புத்தசங்கத்தோரை அரசர்கள் முதல் குடிகள் வரையும் வணங்கி பயபக்த்தியுடன் ஆதரித்து வருவதையும் நாளுக்குநாள் கண்ணுற்று வருங்கால் புத்தசங்கங்களிற் சமணநிலை கடந்து, மகடபாஷையில் அறஹத்துக்கள், என்றும் சகடபாஷையில் பிராமணர்கள் என்றும், திராவிட பாஷையில் அந்தணர் என்றும் வழங்கிவந்த விவேகமிகுத்த மெய்ஞ்ஞானிகளைப் போல் வேஷமிட்டு அதிகார சீவனஞ் செய்யவேண்டிய தந்திர எண்ணத்தால் வடமொழியையும் தென்மொழியையும் கற்று கல்வியற்ற குடிகளிடஞ்சென்று நாங்கள் தான் அறஹத்துக்கள் நாங்கள் தான் பிராமணர்கள், நாங்கள் தான் அந்தணர்கள் என்று சொல்லி வஞ்சித்தும் பொருள் பறித்துஞ் சீவித்துவந்தார்கள். இவ்வகை வேஷமிட்டு புத்த தருமங்களை மாறுபடச்செய்தகாலம் ஆயிரத்தி ஐந்நூறு வருடங்களுக்குட்பட்ட சீவகன் அரசாண்ட காலமாகும்.

சீவக சிந்தாமணி

செங்கட்புன்மயிர் தோல்நிரைச்செம்முக / வெங்கணோக்கிற்குப் பாயமிலேச்சனை
செங்கட்டீவிழியாற்றெழித்தான்கையு / ளங்கட்போது பிசைந்தடு கூற்றனான்.

இவ்வகையாக மிலேச்சரென்னும் ஆரியர்கள் வடபரதங் குடியேறி பிராமணவேஷமிட்டு புத்ததருமங்களைச் சார்ந்துக் கல்வியற்ற சிற்றரசர்களையும் பெருங்குடிகளையும் தங்கள் வசப்படுத்திக்கொண்டு புத்ததருமங்களையும் சங்கங்களையும் மாறுபடுத்திவருங்கால் கல்விமிகுத்த விவேகிகள் மிலேச்சர்களின் வேஷங்களை அறிந்து அடித்துத்துறத்தியக்கால் மிலேச்சர்களின் மாறுவேஷங்களைப் பறைகிறவர்களும், மிலேச்சர்களின் கட்டுக்குள் அடங்காமல் அன்னியப்பட்டவர்களுமாகிய மேன்மக்களைப் பராயர் பராயரென்றுகூறி பாழாக்கிய சரித்திரத்தை அஸ்வகோஷாவென்பவர் கூறியுள்ள நாராதிய புராணசங்கைத் தெளிவென்னும் நூலில் பரக்கக் காணலாம்.

நாராதிய புராணச்சங்கைத் தெளிவு : 317 - பாடல்

கறைவடுவுள்ளக் காட்சியாற் புருசர் / கனமடஞ் சுருளிளை யழித்து
திறைகவர் வேடஞ் சாற்றிமுப்புரிநூற் / சிலைகொழு வளமைகடேற்றி
மறையவரென்கோல் மாட்டியங்கோர்ந்து / வழுக்குறை யூட்டிவாமனரைப்
பறைபவரெந்தங் கொடுமுறை தூற்றிப் / பறையர்கட் பறையரென்றாற்றே.

- 1:44; ஏப்ரல் 15, 1908 –

பௌத்தசங்க மேன்மக்களால் வழங்கிவந்த பேதவாக்கியங்களும் அதன் உபநிட்சயார்த்தங்களும் வடபரதந் தென்பரத முழுமையும் பரவிவந்த காலத்தில் நமது சக்கிரவர்த்தித் திருமகனாகும் சித்தார்த்தி பெருமான் ஐந்திந்திரியங்களை வென்ற வல்லபங்கொண்டு அவரை ஐந்திரரென்றும் இந்திரரென்றும் ஓர் பெயரளித்து இந்திரவிழாவென்றும் இந்திர திருவென்றும் இந்திரவிழாக்கோலம் என்றும் வடபரதந் தென்பரத முழுமையுந் கொண்டாடிவந்தார்கள். அங்ஙனம் புத்ததருமத்தைக் கொண்டாடிவந்த மாக்களை இந்தியர் என்றும் அவர்கள் கொண்டாடிவந்த தன்மத்தை இந்தியர் மார்க்கம் என்றும் இந்துவேதமென்றும் அவர்கள் வாசஞ்செய்யும் தேசத்தை இந்தியா தேசமென்றும் இந்துதேசம் என்றும் வழங்கிவந்தார்கள்.

அருங்கலைச்செப்பு

இந்தியத்தை வென்றான் தொடர்பாட்டோடாரம்ப
முந்து துறந்தான் முனி.

அறநெறிச்சாரம்

இந்தியக்குஞ்சரத்தை ஞானப்பெருங்கயிற்றால்
சிந்தனைத்தூண் பூட்டிச் சேர்த்தியே - பந்திப்பர்