பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 87

பெயர்வைத்துக் கொண்டு பெண்களுடன் தாங்களும் கலந்துப் புசித்து வந்தார்கள்.

இத்தகைய மதுமாமிஷங்களை அந்தரங்கத்திற் புசிக்கும் வேஷ பிராமணர்களின் செய்கைகளை அறிந்த பௌத்தர்கள் அவர்களை அடித்துத் துறத்திவந்தபோதிலும் தங்கள் தந்திரங்களாலும் மித்திரபேதங்களாலும் கல்வியற்றப் பெருங்குடிகளையுஞ் சிற்றரசர்களையும் வசப்படுத்திக்கொண்டு புத்தசங்கத்தோரால் அவரவர்கள் தொழில்களுக்கென்று எழுதிவைத்திருந்தப் பெயர்களைக் கீழ்ச்சாதி மேற்சாதி என்று வகுத்து அதில் தங்களை உயர்ந்தசாதி பிராமணரென்று ஏற்படுத்திக்கொண்டு தங்களை அன்னியர்கள் என்று அடித்துத் துறத்தித் தங்கள் வேஷங்களை விவரமாகப் பறைந்துவந்த பௌத்தர்களைத் தாழ்ந்த சாதி பறையர்கள் என்று வகுத்துப் பலவகை இடுக்கங்களால் பாழாக்கித் தங்கள் பொய்வேஷத்திற்கும் பொய்ப் போதங்களுக்கும் அடங்கி நடந்துக்கொண்ட அரசர்களை ஆதரித்துக் கொண்டும் தங்கள் பொய் வேஷங்களையும் பொய்ப் போதகங்களையும் அறிந்து துறத்திய அரசர்களை மித்திர பேதங்களால் கொன்றும் பலவகைத் துன்பங்களைச் செய்துவிட்டது மல்லாமல் புத்த தன்ம நூற்களையும் அழித்து புத்த சங்கங்களையும் மடங்களையும் பாழாக்கித் தங்கள் பிராமணவேஷத்தை பலப்படுத்திக் கொண்டார்கள்.

பிச்சை எடுத்து உண்பதிலும் அதிகாரப் பிச்சையால் தங்கள் தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் சுகித்துவாழ்வதை அறிந்த இத்தேசத்து ஆந்திரசாதி, கன்னடசாதி, மராஷ்டக சாதி, திராவிடசாதியோர் என வழங்கியக் கூட்டத்தாருள் சில விவேகிகள் தாங்களும் பிராமணவேஷமிட்டு வெளிவந்ததினால் பழய வேஷ பிராமணர்களுக்கும் புதுவேஷப்பிராமணர்களுக்கும் மனத்தாங் கலுண்டாய் அவர்களை வேஷபிராமணர்களென்று கண்டித்தாலோ நீங்களும் வேஷபிராமணர்களே என்று விளக்கிவிடுவார்கள். அதினால் நமக்குக் கனக்குறைவும் வேஷமும் வெளியாகிவிடும் என்று எண்ணி மாட்டிறைச்சியைப் பறிகொடுத்த பாப்பாத்தி போல் வெளிக்குச் சொல்லாமல் உள்ளுக்குள்ளாக விரோதத்தை வைத்துக் கொண்டு பிராமணர்கள் என்னும் வேஷம் போட்டிருந்த போதிலும் ஒருவர் வீட்டில் ஒருவர் புசியாமலும் ஒருவர் பெண்ணை மற்றொருவர் கொள்ளாமலும் மாறுபட்டே நின்றுவிட்டார்கள்.

பிச்சையேற்றுண்பதிலும் அதிகாரப்பிச்சை அதிகரிக்கவும் இதனந்தரார்த்தம் அறியாது ஏமார்ந்து கொடுப்போர் ஏராளமாகவும் பிராமணர்கள் வேஷம் பலபாஷைக்காரர்களிடத்தும் அதிகரித்துவிட்டது. அங்ஙனம் பிராமண வேஷங்கள் மட்டிலும் அந்தந்த பாஷையில் அதிகரித்துவிட்டபோதிலும், ஆந்திரபாஷையில் க்ஷத்திரியன் யார். வைசியன் யார். சூத்திரன் யார். இந்தப் பறையன் யார். கன்னட பாஷையில் க்ஷத்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், இந்தப் பறையன் யார், மராஷ்டக பாஷையில் க்ஷத்திரியன் யார். வைசியன் யார். சூத்திரன் யார். இந்தப் பறையன் யார். திராவிட பாஷையில் க்ஷத்திரியன் யார், வைசியன் யார். சூத்திரன் யார். இந்தப்பறையன் யார்.

- 1:47; மே 6, 1908 –

என்பவற்றுள் ஆந்திர, கன்னட, மராஷ்ட்க, திராவிடம் என்னும் பாஷைகளுள் பிராமணன் என்னும் பெயர்களை மட்டிலும் வைத்துக்கொண்டு மற்ற க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்னும் வரிசைக்கிரமப் பெயர்கள் ஒவ்வொரு பாஷைகளிலும் இல்லாமல் திராவிட பாஷையிலுள்ளப் பெருங் குடிகளைப் பறையன் என்றுத் தாழ்த்திப் பலவகை இடுக்கண்கள் செய்துவந்த காலத்தில் பௌத்ததன்ம விவேகிகள் அவற்றைக் கண்டித்துக் கொண்டுவந்தது மன்றி நான்முகன் மாலாகும் புத்தருக்கு சிரேஷ்ட வம்மிஷ வரிசையோரென்றுஞ் சத்தியதன்மப் பரம்பரையோரென்றும் விளக்கி புத்தபிரானை சிந்திக்காதவர்களே பறையர்கள் என்றும் பரக்கத்தீட்டியிருக்கின்றார்கள்.