பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு


காலங்களை கணித ஆராய்ச்சியைக் கொண்டு கூறவும் தன்ம கன்மாதி களை சீர்பெறச் செய்யவுமுள்ளவர்களாவர்.

அத்தகையச் செயலால் குடிகளுக்கு சத்தியதன்மங்களையூட்டி நீதிவழுவா ஒழுக்கத்தில் நடக்கச்செய்வதுமன்றி வேள்வி கிருத்தியங்களில் ஓஷதி யென்னும் வேர்வகைகளாலும், விரகுவகை களாலும், தைலவகை களாலும் வேள்விசெய்து வியாதிகளை நீக்குதலுமாகிய தன்மகன்மங்களை நடாத்தி வந்தார்கள்.

அத்தகையப் பிரயோயிதர்களும் தன்ம கன்மங்களுந் தற்கால முண்டோ, இத்தேசவெத்திக்கிலுங் கிடையாவாம். தற்காலமுள்ள டம்ப மடாதிபதிகளின் செயல்களையும் வேஷ புரோகிதர்களின் விருத்தாந்தங்களையும் வேளை வருகையில் வெளியிடுவாம்.

- 2 46; ஏப்ரல் 17, 1909 -

28. பூர்வ பௌத்த பிக்ஷக்களாம் சமண முநிவர்கள் வீற்றிருந்த குகைகள்

திருநெல்வேலி ஜில்லா மருகல் தலையிலுள்ள புவிலுடையார் மலையில் கற்றரை அமைந்துள்ள ஒரு குகையும், பிராஹமி சாசனம் ஒன்றும் கண்டுபிடித்தார்கள். இதன்றி மதுரை ஜில்லாவிலுள்ள ஆனைமலை அரித்தட்டிலும் குகைகள் கண்டுபிடிக்கப் பட்டது. திருநெல்வேலி ஜில்லா வீரசிகாமணிக்குன்றிலும் ஓர் குகை காணப்பட்டது. கடந்த வருடம் மதுரை ஜில்லா வரிச்சியூர் மலையில் ஓர் குகையும், மெட்டுப்பட்டியில் ஒரு குகையும் அகப்பட்டது. அதேவருடம் திருபுறங்குன்றத்திலும், அழகர் மலையிலும் மூன்று குகைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இப்பழையக் குகைகளைக் கண்டு இவைகள் யாவும் பௌத்தர்களால் ஏற்பட்டதா அன்றேல் ஜைனர்களால் ஏற்பட்டதாவென யூகிக்க வேண்டிய தாயிருக்கின்றது. ஏனெனில் பௌத்தர்கள் தங்கள் கொள்கைகளை எப்பாஷையில் எழுதினரோ அப்பாஷையில் ஜைனரும் எழுதியிருக்கின்றனர்.

ஆயினும் பராஹமி சாசனமானது தெற்கிலிருந்த ஜைனர்களால் ஏற்பட்ட தங்கள் பழைய சாசனங்களிலுள்ளதாகக் காணவில்லை. ஆதலின் இக்குகைகள் யாவும் பௌத்தர்களுடையதென்றே தீர்மானிக்கப்பட்டது. அதற்குப் பகரமாய் ஜைனர்களால் எற்படுத்தியுள்ள தமிழ் நூற்கள் யாவிலும் புத்தரையே குறிப்பிட்டிருக்கின்றது. (மெட்ராஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகை)

ஜகதீசனாகும் புத்தபிரான் நிட்டைசாதன உருவம்போலும், சின்முத்திரையை விளக்கிய உருவம் போலும், பரிநிருவாணமுற்ற உருவம் போலும் பூர்வம் பூமியிற் புதைப்பட்டிருந்த சிலாருபங்கள் உலகெங்குங் காணப்படுகின்றன. அதற்காதரவாய் அவரது அஸ்தியும் சாம்பலும் தோன்றப்படுகின்றன. அவரது அடியார்களாகும் சமணமுநிவர்கள் வசித்திருந்த குகைகளும் காணப் பட்டு வருகின்றன.

இத்தகைய சத்திய சாட்சியாம் சரித்திராதாரங்கண்ட மேன்மக்களாகும் ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும், இஃது மெய் சரித்திரமென விசேஷித்துக் கொண்டாடுவதுடன் சிலர் தங்கள் சுகபோகங்கள் யாவையும் விட்டு பெளத்தகுருவாம் பட்டமும் பெற்று வருகின்றார்கள்.

நமது தேயத்தோர் விவேகிகளால் சிந்திக்கவும், விவேகிகளால் ஏற்கவும், விவேகிகளால் அனுசரிக்கவும், விவேகிகளால் கொண்டாடவும் பெற்ற ஜகத்குருவின் சரிதையை விசாரியாமலும், அதன் பலனை உணராமலும், அதன் சுகம் பெறாமலும் பொய்ச் சரிதை, பொய்ம்மதம், பொய்ச்சாதி முதலியதைப் பின்பற்றி நிற்பது பரிதாபம், பரிதாபமேயாம்.

வீரசோழியம்

தோடா ரிலங்கு மலர்கோதி வண்டு / வரிபாடு நீடுதுணர் சேர்
வாடாத போதி நெறிநிழன் மேய / வரதன் பயந்த வறநூல்
கோடாத சீல விதமோவி வாய்மெய் / குணனாக நாளு முயல்வார்
வீடாத வின்ப நெறிசேர்வர் துன்ப / வினைசேர்த நாளு மிலரே.

- 3:15; செப்டம்பர் 22,1909