பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /43


நிகழ்காலம், வருங்காலம் மூன்றின் சரித்திர பேதங்களை ஆராய்ந்து சங்கிக்க வேண்டுகிறோம்.

- 4:18; அக்டோபர் 12, 1910 –

59. காமத்துப்பால்

மயிலை எஃப்.எம். என்னும் அன்பரே, தாம் வினாவிய சங்கை விசேஷித்ததேயாம். ஆயினும் தாம் வினவியுள்ள நாயனார் திரிக்குறளிலுள்ளக் காமத்துப்பாற், செயல் மெய்யா பொய்யாவென்பதை உணராது வினவியது வீணேயாம். அதாவது, சிற்றின்பமென்னும் காமிய நிலை சகல மக்களுக்கும் இயல்பில் தோன்றும் இன்பமென்னப்படும். அத்தகைய இன்ப நுகர்ச்சி சருவ மக்களுக்கிருந்தும் அதன் புலநிலையறியார்கள். புலன் தென்படலாம், பேரின்பம் பெற்ற தென்புலத்தோரே அவற்றை அறிவர்.

ஆதலின் தென்புலத்தோராம் நாயனார் காமத்துப்பாலாம் சிற்றின்ப நுகர்ச்சியைத் தெள்ளற விளக்கிப் பேரின்பத்தைத் துலக்குவதற்காய் கண்ணும், மூக்கும், செவியும், நாவும் உடலும், ஓர் பெண்ணுருவை நாடி வெளிதோன்றி நுகர்வது சிற்றின்ப நுகர்ச்சியாதலின்,

 'கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியுமைம்புலனு /மொண்டோடி கண்ணேயுள'.

வென்றும் யேக சிற்றின்பத்தில் யேகபாவனையாய் வெளிதோன்றியது போல் ஐம்புலனும் யேக பேரின்பத்தில் யேக பாவனையாய் உள்ளடங்கு மாயின் தாமரைக்கண்ணனுலகாகும் புத்தேளுலகில் சிற்றின்பத்திற்கு மேலாய பேரின்பத்திற் சதா சுகிப்பனென்று கூறுவதற்காய்

 “தாம்வீழ்வார்மென்றோட் டுயிலினினிதுகொ / றாமரைக்கண்ணா னுலகு"

காமமீறி ஐம்புலனா லோடிய கண் அவ்வைம்புலனு மொடுங்கிய பேரின்ப சுகத்தையும் ஆற்றலையும் விளக்கியிருக்கின்றார்.

பொறிவாயிலைந்தவித்தான் பொய் தீரொழுக்கம்,
நெறிநின்றார் நீடு வாழ்வார்.

காமத்தால் சிற்றின்பம் நுகர்ந்து சீர்கெடுவதினும் என்று மழியா பேரின்பம் நுகர்ந்து நித்தியவாழ்வடைவதே அழகாதலின் சிற்றின்பத்தை செவ்விதில் விளக்கி பேரின்பம் அளாவும் போக்கில் விடுத்திருக்கின்றார். உள்ளதை உண்மெய்க்குத்தாரமாய் விளக்குவதே புத்ததன்மமாகும். உள்ளது வொன்றிருக்க இல்லாததைக் கூட்டிப் பொய்யை மெய்போல் பேசுவது அபுத்த தன்மமாகும். கொக்கோகரும் மதனனூலாரும் உலக மக்கள் நோயின்றி வாழ்க நூலெழுதினார்கள். அவர்கள் கருத்தை உணராது காமிய விருப்ப மிகுத்து கெட்டு நூலாசிரியரை நிந்திப்பதழகாமோ. உள்ளதை வொளியாது விளக்கி மக்களைச் சீர்பெறச்செய்வது மதியூகிகளின் கடனாதலின், நாயனார் தானியற்றியுள்ள காமத்துப்பாலில் புருஷருக்குள்ள செயலையும், இஸ்திரீ களுக்குள்ள செயலையும் தெள்ளற விளக்கியிருக்கின்றார்.

அவர் விளக்கியச் செயலுக்கும், அனுபவத்திற்கும் ஏதோ மாறுதலுண் டோ, இல்லையே. இத்தகைய மாறுதலற்ற மதியூகிகட் போதத்தைக் கண்டு அகமகிழாது திகைப்பது வீணேயாகும். உலகத்தின் மனுகுலத் தோற்ற சருவ ஆடம்பரங்களும் காமியத்தையே பீடமாக வகுத்துள்ளதை அறியாது அதை சிறப்பித்தது தவரென்று கூறுதல் உள்ளுக்குக் காமியசிறப்பை ஒளித்து வெளிக்குத் தூற்றுவ தொக்கும். நாயனார் அங்ஙன மொளியாது மக்களின் சருவசெயல் களையும் அளந்து கூறியவிடத்து காமத் துப்பாலையும் தெள்ளற விளக்கி விட்டார். காரணம் இன்பத்தையும் துன்பத் தையும் விளக்கும் ஓர் போதனா நிலையாகும்.

அதற்குப் பகரமாய் கிறிஸ்துவானவர் தனது மாணாக்கரையும் மற்ற மக்களையும் நோக்கி மனிதன் ஓர் இஸ்திரீயை நோக்கிப் பார்த்த போதே அவளையவன் சேர்ந்ததொக்குமென போதித்திருக்கின்றார். காமிய நிலை யைக் கருத்தறிந்து கூறியுள்ளபடியால் அவரங்ஙனங் கூறலாகாதென்னலாமோ போதனைப் புதைப்பொருள் பலவாறு நிற்கும். அவைகளை உணர்ந்தே சங்கித்தல் வேண்டும். உணராச் சங்கிப்புலன் தராவாம்.

- 4:18; அக்டோபர் 12, 1910.-