பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /45


இழுத்ததென்று நீ கூடத் தொடர்ந்தாயானால் / எண்ணெண்ணா பிறப்பிறப்பு யெய்தும்பாரு
அழுத்தி மனக் கேசரத்தில் நின்றுமைந்தா / அப்பனே லலாடத்தில் தூங்குவாயே

- 4:19; அக்டோபர் 19, 1910 -

62. மதங்களின் காலவரை

வினா : ஸ்ரீ கௌதம புத்தர் பிறந்து ஞானத்தைக் கண்டுணர்ந்து உலகத்தாருக் கூட்டியபின் புத்தமதமென்று பெயராயிற்றென்று தெற்றென விளங்கியதுமன்றி மற்ற மதங்களெல்லாம் புத்ததர்மத்தை பீடமாகக் கொண்டுளதென்று மதித்துக்கொண்டேன். அரசமரக்கடவுள் பிறவா முன்னிருந்த பிரஜைகளும், அரசர்களும் எம்மதத்தைச் சார்ந்திருந்தார்கள்? அவர்கள் எவ்விதக் கொள்கையி லிருந்தார்கள்? தற்காலமுள்ள மதங்களாகிய சைவ, வைணவம் கிரேதாயுக முதற்கொண்டு அநாதியாயிருக்கிறதென்கிறார்களே அம்மதத்தைத் தான் சார்ந்திருப்பார்களென்று எண்ணுகிறேன். ஆதலால் இவ்வடியான்மீதுக் கருணப் பாவித்து விளக்கிக் காட்டவேணுமாய் தங்களிரு திருவடிகளை சிரம்பூண்டு நிற்கின்றனம்.

பி.எஸ். அச்சுதானந்தம், திருப்பத்தூர்.

விடை : அன்பரே, தாம் வினவிய சங்கை விசேஷித்ததன்று. காரணமோவென்னில் புத்தபிரானுக்கு முன்பு வரிவடிவமின்றி ஒலிவடிவில் ஆறு சங்கங்கள் நடந்துவந்ததை நமது பூர்வத்தமிழொளியில் தெள்ளற விளக்கியிருக்கின்றோம் தெரிந்துகொள்ளுவீராக. கிரேதாயுகமென்னும் ஓர் காலத்தைக் குறித்தப்பின்னர் அதனின்றோர் அநாதி மதந்தோன்றுமோ, அநாதியினின்றோர் ஆதிகாலந் தோன்றிற் றென்னில் பொருந்தும். ஆதிகாலத்தினின்றோர் அநாதி மதந் தோன்றிற் றென்பது பொருந்துமோ. பத்து மக்கள் சம்மதமே மதமென்னப்படும். அத்தகைய மதம் அநாதிகாலத்துள்ளதெனில் அங்கு மதங்களில்லையென்பதே துணிபு. மக்களில்லாது மதங்கள் தோன்றுதற் கேதுவில்லையாதலின் அநாதியாகவுள்ள மதமென்பது அபுத்தமதமேயாகும். தாம் வினவியுள்ள 2- மதங்கள் தோற்றிய காலவரைகளை இனி வரைந்துவரும் இந்திரர்தேச சரிதத்தாலறிந்துக் கொள்ளலாம்.

- 4:21; நவம்ப ர் 2, 1910 -

63. ஜப்பானிலும் பறையர்

வினா : ஐயா, ஜப்பானிலும் பறையர்களுண்டென்பதாக சில பத்திரிகைகளில் பார்த்தேன். அவ்வகை சரித்திரங்களேதேனுமுண்டா.

பா. இராஜலிங்கம், குண்டூர்.

விடை : அன்பரே, தாம் வினாவிய சங்கை தட்டிக்கேட்க ஆளில்லாவிடின் தம்பி சண்டப்பிரசண்ட னென்பதுபோல அஃதோர் தமிழ் லட்சணமறியா பராயர்கள் கதையாகும். அதாவது பறையனென்னும் பெயர் வாய்ப்பறை, தோற்பறை யடிக்கும் சகல மநுக்களுக்கும் பொருந்திய தாயிருக்க ஜப்பான் தேசத்திலும் பறையர்களிருந்தாரென்று கூறுமொழி தமிழ்வாசகமும் தமிழனது லட்சணமுமறியார்களின் கூற்றென்றே கூறல் வேண்டும். காரணம், ஜப்பானியர்களுக்கும், ருஷியர்களுக்கும் யுத்தம் நேரிட்ட போது ஜப்பானியர்களைக் குரங்குகளென்றும், ருஷியர்களைக் கரடி களென்றும் யிழிவுகூறி யெழுதிவந்த பத்திரிகைகள் ஜப்பானியர்களின் அதியூக வல்லபத்தையும் அவர்களின் அன்பின் மிகுதியையும் கேட்ட பின்னர் ஜப்பானியர் தங்களைச் சார்ந்தவர்களென்றும், தங்களுக்குள் பறையர்களிருப்பதுபோல் ஜப்பானிலும் பறையர்களிருக்கின்றார்களென்றுங்கூற நேர்ந்தது, யெக்குரங்கின் மதியோ அவற்றையவர்களே உணர்ந்துக் கொள்ள வேண்டியதேயாகும். "எட்டினாற் குடிமி எட்டாவிட்டால் பாதம்" எனும் பழமொழிக்கிணங்க சமயோக்த்தமாகக் கட்டுக்கதைகளைக் கட்டிவிடுவது இத்தேசத் தோருட் சிலரின் சதாதொழிலாகும். அத்தகையப் பொய்யர்களின் மொழியை