பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /73

வானந்தமடைவார்கள் அவர்கள் செய்துவரும் பரோபகாரமும் பரிமளிக்கும். ஆதலின் அன்னிய மதத்தோரை நீதி நெறியிலயித்துத் தங்க ளன்பின் மயமாக்கிக்கொள்ள வேண்டுகிறோம்.

- 5:44; ஏப்ரல் 10, 1912 -
 

96. மதாச்சாரங்கள்

வினா : நெடியகடல் சூழ் இவ்வுலகினிடத்தே உருவெடுத்துள்ள மானிடப் பிறவிகளுள் சொற்பக் கூட்டத்தோர் மக்களுக்குள் உண்டாம் அன்பு, ஈகை, சாந்தமெனும் முக்குணங்களற்று சாதிவேடம் பூண்டு சாமிசாமி என்று முக்காலும் நீரில் மூழ்கி முகத்தினிடத்தே விபூதியென்னுஞ் சாம்பலைப் பூசி கழுத்தினிடத்தே உருத்திராக்கமெனும் ஓர்வித கொட்டையைக் கட்டி மொட்டைத்தலையில் மூன்று குட்டு குட்டி கோயிலென்னுங் கல்லை சுற்றி சுற்றி முணுமுணென்ற மந்திரத்தை யோதியோதி சிவசிவா சிவசிவா, ஹரஹரா ஹரஹரா, ஹரிஹரி ஹரிஹரி என்னும் மொழிகளை ஓதி, விபூதியினிடத்து இவ்வளவு மகிமெயுண்டு, கொட்டையினிடத்து இன்னுமதிக மகிமெயுண் டென முழுக்க முக்காடிட்டு கூறித்திரியும் கூற்றுகள் குறைக்கூற்றோ. அன்றேல் நிறைக்கூற்றோ அறிகிலேன். அன்றியும் இவர்கள் கூறித்திரியும் மொழிகள் எச்சமயத்தை அநுசரித்ததோ யாவருக்குரியதோ விளங்கவில்லை. நிற்க. இவர்கள் செய்துவரும் இத்தயை செயல்களால் உண்டாகும் நன்மெ தீமெ யாது. இன்னும் உலகத்தாருக் குண்டாம் சுக அசுகங்களென்ன, அல்லது இவர்கள் செய்துவரும் இத்தியாதி விஷயங்களுக்கு ஞானார்த்தம், தத்து வார்த்தம், அந்தரார்த்தம், பகிரயார்த்தம், வாசியார்த்தம் லச்சியார்த்தம் என்னும் ஈறாகவுள்ள அர்த்தபேதங்கள் ஏதேனுமுளதோ. அவ்விதம் அர்த்தபேதங்கள் ஏதேனு முளதாயின் அவைகளைக் கற்பதினால் ஏதேனும் பயனுளதோ. நிற்க. உலகத்தினிடத்தே மக்கள் ஈடேறுவதற்குண்டாம் மார்க்கங் களென்ன. இது களை எல்லாம் எமது கல்விக்களஞ்சியக் கருணாகரராம் பண்டிதப்பெருமான வர்கள் எனது சிற்றறிவிற்கு புகும் வண்ணம் தெளிவுற விளக்கி தமதருமெவாய்ந்திலகும் சத்தியத் தமிழனின் ஓர் கோணத்திற் தெரிவிக்க வேண்டுகின்றேன்.

எஸ்.சி. ஆதிகேசவன், புதுப்பேட்டை .

விடை : அன்பரே! தாம் வினாவிய சங்கை விசேஷித்ததேயாயினும் விசாரிணை மிகுத்தோரே அதன் சுருக்கத்தைத் தெளிந்துக்கொள்ளுவார் களன்றி ஏனைய மந்தமதிகளும் சுயநலப்பிரியரும் விசாரிணையை அகற்றி சொந்த மதத்திலேயே இருத்தல் வேண்டும். சோம்பேறித் தொழிலையே பெருக்க வேண்டுமெனத் துடைதட்டுவோ ரதன் சுருக்கத்தை அறிய மாட்டார்கள்.
இவைகள் யாவும் மதக்கடைபரப்பி ஜீவிக்கும் மதாச்சாரிகளின் கட்டு பாடும் சுயப்பிரயோசனக் கட்டுக்கதைகளுமேயாம். அதாவது அண்டை வீட்டுக்காரன் அன்னமே சாமி அன்னமே சாமியென்னப் பக்கத்து வீட்டுக் காரன் பருப்பு நெய்யேசாமி, பருப்பு நெய்யே சாமியென்பானாயின் பலர் பக்கத்து வீட்டுக்காரன் வார்த்தையை நம்பி நடப்பதும், சிலர் அண்டை வீட்டுக்காரன் வார்த்தையை நம்பி நடப்பதே சுவாபமாதலின், விசாரிணை யென்பதே அவர்களுக்குக் கிடையாது விசாரிணைப் புருஷர்களாயிருப் பார்களாயின் இம்மதக்கடைச் செயல்கள் யாவையும் மதாச்சாரிகளின் சுயப்பிரயோசனக் கட்டுக்கதைகளென்றும் அம்மொழிகளைப் பலுக்குவ தாலும் தட்சணைக் கொடுத்துத் தொழுவதாலும் யாதொரு பயனுமில்லை என்றே தெளிந்துக்கொள்ளுவார்கள். விசாரிணையற்றவர் களாதலின் அண்ணமார்சாமி, கன்னிமார்சாமி, காட்டேறிசாமி, இரிச்சாத்தாள் சாமிகள் தோன்றிவிட்டது போல் பொருளற்ற மொழிகளையும் நிலையற்ற சாமிகளையும் நம்பிக்கொண்டு விண்பணவிரயங்களைச்செய்துக் கொண்டு பாழடைகின்றார்கள். இதிற் சுகம் பெறுவோர், மதக்கடை வியாபாரிகளாம் மதாச்சாரிகளேயாவர்.