பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 101

பூசுகின்றனர்; கைகளில் வெள்ளை வளையல்களை நல்லனவாகத் தேர்ந்தெடுத்து அணிகின்றனர்; கண்கட்கு மை தீட்டுகின்றனர்; கூந்தலில் அன்றலர்ந்த மலரைச் சூடுகின்றனர்.

குஞ்சரம் அனையார் சிந்தைகொள் இளையார் பஞ்சினை அணிவார் பால்வளை தெரிவார் அஞ்சனம் என வாள் அம்புகள் இடையே
நஞ்சினை இடுவார் நாள்மலர் புனைவார்

(68)

குஞ்சரம் அனையார் = யானை போன்ற ஆடவர். இளையார்= இளம் பெண்கள். பால்வளை = வெள்ளை வளையல்கள். மங்கல விழாவில் வெள்ளை வளையல் அணிவது மரபு. வாள் அம்புகள் = ஒளி பொருந்திய அம்புகள் போன்ற கண்கள். அம்புகள் கண்களைக் குறிப்பது. இலக்கணத்தில் ஆகுபெயர் எனப்படும். அம்புகள் தைத்து வருத்துவதுபோல், அரிவையரின் கண் பார்வை ஆடவரின் உள்ளத்தைத் தைத்து வருத்துவதால், கண்கள் அம்புகள் எனப்பட்டன. அம்புகள் போன்ற கண்களில் அஞ்சனம் (மை) பூசினர் என வாளா கம்பர் கூறிவிடவில்லை; கண்களில் அஞ்சனம் (மை) பூசும் பெயரில் நஞ்சைப் பூசுகின்றனர் என்பது சுவைக்கத் தக்கது. ஏனெனில், அரிவை மார்களின் பார்வை ஆடவர்களை நஞ்சுபோல் துன்புறுத்துகிறதாம். இதில் இன்னொரு சுவையும் உள்ளது. போர்க்களத்தில் பயன் படுத்தும் அம்புகளின் நுனியில் நஞ்சைச் சேர்த்திருப்பார்களாம். அம்பு தைத்ததும், புண் உண்டாக, அந்தப் புண் வழியாக நஞ்சு உடலுக்குள் புகுந்து கொன்றுவிடுமாம்.

எனவேதான், கண்களாகிய அம்புகளில், அஞ்சன மாகிய நஞ்சை இடுகின்றார்களாம். இதில் மேலும் ஒரு சுவை உள்ளது! கண்களைச் சுற்றி மை தீட்டினால், முகம் மிகவும் கவர்ச்சியாயிருப்பதை யாரும் அறிவர். அதனால் தான் அஞ்சனம் நஞ்சின் இடத்தை இலக்கியத்தில் பெற்று விட்டது.