பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106 () சுந்தர சண்முகனார்

இப்போது திங்களுக்குத் தோற்றுவிட்டனவாம். ஒரு சுவை இது.

முகம் திங்களுக்குத் தோற்றது போலவே, பெண்டிரின் அமிழ்தினும் இனிமையாய் இருந்து குழலையும் யாழையும் வென்றிருந்த இனிய சொற்கள் இப்போது குழலுக்கும் யாழுக்கும் தோற்றுவிட்டனவாம். அதாவது, வருத்தத்தால் சொற்கள் நிலை தடுமாறுகின்றன. பாடல்:

கிளையினும் நரம்பினும் நிரம்பும் கேழன அளவிறந்து உயிர்க்க விட்டு அரற்றும் தன்மையால் தொளைபடு குழலினோடு யாழ்க்குத் தோற்றன இளையவர் அமுதினும் இனிய சொற்களே

(176)

கிளை=மூங்கில்; மூங்கிலில் தொளை போட்டது புல்லாங்குழல். நரம்பினும் என்பது யாழ் நரம்பைக் குறிக்கிறது.

ஆம்பல் பழனம்

அரண்மனையில் தயரதனின் முப்பெருந்தேவியரோடு, அறுபதினாயிரம் வேறு மனைவியரும் உள்ளனர். மகன் இராமன் காடு செல்வான் என்ற துயரத்தால் இப் பெண்டிர் அனைவரும் வாய் விட்டு- வாய் திறந்து அழுதனராம். இதனால், அரண்மனைப் பகுதிகள், பகலிலே செவ்வாம்பல் பூத்த பழனம் போல் இருந்தனவாம்.

புகலிடம் கொடுவனம் போலும் என்று தம் மகன்வயின் இரங்குறும் மகளிர் வாய்களால் அகல்மதில் நெடுமனை அரத்த ஆம்பல்கள் பகலிடை மலர்ந்ததோர் பழனம் போன்றவே

(177)

ஆம்பல் இரவிலே மலர்வது. இம் மலர் பெண்களின் வாய்க்கு உவமையாக உரைக்கப்படுவது. எனவே, பெண்களின் சிவந்த வாய்கள் திறக்கப்பட்டதால், அரண்மனைப் பகுதிகள் பகலிலே ஆம்பல் மலர்ந்த பழனமாகத் தோற்றம் அளித்தனவாம்.