பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130 ) சுந்தர சண்முகனார்

காலாகிய தாமரைப் பூவில் கையைப் இறுகப் பூட்டிக் கொண்டானாம்.

தீட்டரு மேனி மைந்தன் சேவடிக் கமலப் பூவில் பூட்டிய கையன் பொய்யில் உள்ளத்தன் புகல லுற்றான்

(34)

என்பது பாடல் பகுதி. பூட்டிய' என்பது, இறுகப் பிடித்துக் கொண்டதான பொருளைத் தந்து சுவையூட்டுகிறது.

மண்ணு நீர் ஆட்டல்

காட்டில் இராமன் படுத்திருந்த மண் பகுதியை அறிந்து நோக்கிப் பரதன் அழுதானாம். அதாவது, அவன் கண்களிலிருந்து நீர் அந்த மண் பகுதியின் மேல் கொட்டிற்றாம். கடவுள் வழிபாட்டில் நீராட்டுதல் (அபிஷேகம் செய்தல்) என்பது ஒரு பகுதி. இங்கே, இராமன் படுத்திருந்த மண் பகுதியை, பூசனை செய்வது, போல் கண்ணிரால் நீராட்டினானாம்.

வார்மணிப் புனலால் மண்ணை
மண்ணுநீர் ஆட்டும் கண்ணான்

(39)

என்பது பாடல் பகுதி. மண்ணு நீர் என்பது நீராட்டும் (அபிஷேக) நீர் எனப் பொருள்படும். மண்ணுதல் என்பதற்குக் குளித்தல்- தூய்மை செய்தல் என்னும் பொருள் உண்டு.

மடல் பெரிது தாழை மகிழ்இனிது கந்தம் உடல் சிறியர் என்றிருக்கவேண்டா- கடல்பெரிது மண்ணீரும் ஆகாது அதனருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும்

(12)

என்னும் ஒளவையின் மூதுரை நூல் பாடலிலே உள்ள மண்ணீர்' என்பது, தூய்மை செய்யக் குளிக்கும் நீர் என்னும் பொருள் தருவது ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. ‘மண்ணை மண்ணு நீர் ஆட்டும்' என்னும் கம்பரின் சொற்றொடர் ஆட்சி சுவையானது.