பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158 - சுந்தர சண்முகனார்


ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை (985)

என்னும் குறள் கருத்தோடு ஒப்பு நோக்கத் தக்கது.

நகர் நீங்கு படலம்

குழலும் யாழும்

தயரதனின் இளைய மனைவிமார்களின் சொற்கள் இதற்கு முன், அமிழ்தினும் இனியவாகிக் குழலையும் யாழையும் வென்றன. இராமன் பிரிந்த போதோ, அழுது புலம்பியதால், அவர்தம் சொற்கள் குழலுக்கும் யாழுக்கும் தோற்றனவாம்:

கிளையினும் நரம்பினும் நிரம்பும் கேழன
அளவிறந் துயிர்க்கவிட் டரற்றும் தன்மையால்
தொளைபடு குழலினோடு யாழ்க்குத் தோற்றன
இளையவர் அமுதினும் இனிய சொற்களே

(176)

என்னும் பாடலில் வெற்றி பெற்ற குழலும் யாழும்,

குழலினிது யாழினிது என்ப தம்மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

(66)

என்னும் குறளில் அடைந்த தோல்விக்கு ஈடுகொடுக் கின்றன. மக்களின் மழலைச் சொல்லுக்குத் தோற்றவை யல்லவா இவை?

சுமந்திரன் மீட்சிப் படலம்

இன்பமும் துன்பமும்

திரும்ப அயோத்திக்கு வரமுடியாது என்று இராமன் அறிவித்து விட்டதால் சோர்ந்து வருந்தும் சுமந்திரனுக்கு இராமன் ஆறுதல் கூறுகிறான்: இன்பம் வந்தபோது இன்