பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 185


கைகேயி சூழ்வினைப் படலம்

கைகேயியின் கைத்திறன்

கூனியின் உரையால் உள்ளம் மாறிய கைகேயி தன் ஒப்பனையைச் (அலங்காரத்தைச்) சிதைத்துக் கொண்டாள். கரிய கூந்தலில் வைத்திருந்த பூக்களை (மாலையை) கரிய முகிலுள் நுழையும் திங்களைப் பிய்ப்பதுபோல் வண்டுகள் வருந்தப் பிய்த்தெரிந்தாள்.

சோனை வார்குழல் கற்றையில் சொருகிய மாலை வான மாமழை நுழைதரும் மதி பிதிர்ப்பாள்போல் தேன் அவாவுறும் வண்டினம் அலமரச் சிதைத்தாள்

(1)

மதியைப் பிதிர்ப்பது கிடையாது; எனவே, இது, இல் பொருள் உவமையாகும். இன்னும் கைகேயியின் கைத் திறன் வருமாறு.

கைகேயி, புகழ்க் கொடியை வேர் அறுத்தாற்போல் தன் மேகலையை அறுத்தெறிந்தாள். காலில் இருந்த கிண்கிணியையும் கையில் இருந்த வளையல்களையும் நீக்கி விட்டாள். திங்களின் நடுவில் உள்ள மறுவைத் (களங்கத்தைத்) துடைப்பதுபோல் தன் நெற்றியில் இருந்த மங்கலப் பொட்டை அழித்துவிட்டாள்.

விளையும் தன் புகழ் வல்லியை வேர் அறுத்தென்ன
கிளைகொள் மேகலை சிந்தினள்; கிண்கிணி யோடும்
வளை துறந்தனள்; மதியினில் மறுத்துடைப் பாள் போல்
அளக வாள் நுதல் அரும் பெறல் திலகமும் அழித்தாள்

(2)

புகழை வெண்ணிறமாகச் சொல்வது இலக்கிய மரபு. கம்பர் இதைப் பல இடங்களில் கூறியுள்ளார். (இது பற்றி யான் சுந்தர காண்டச் சுரங்கம்' என்னும் எனது நூலில் ஒரிடத்தில் விரிவாக விளக்கியுள்ளேன்) வெண் புகழாகிய கொடியை அறுத்தாள் என்றால், வெண்மையான முத்துக்களால் ஆன மேகலையை அறுத்தாள் என்பது பொருள். நெற்றிப் பொட்டை அரும் பெறல்