பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அயோத்தியா காண்ட ஆழ் கடல் 181.


கைகேயிக்குச் சொல்லிலிருந்து நஞ்சு வந்தது. நஞ்சு தீண்டினால் தான் கொல்லும்; சொல் காதால் கேட்கவே கொல்வதாயிற்று. பாம்பால் யானை வீழ்ந்ததுபோல், மனைவியால் மன்னன் விழுந்தான்.

தாய் கண்ட கன்று

இராமன் கைகேயியின் மாளிகைக்குச் சென்று, மாலையில் மந்தையிலிருந்து திரும்பி வீடு வந்த தாய் ஆவினை ஆன் கன்று கண்டு மகிழ்ந்தாற்போல் கைகேயியைக் கண்டு மகிழ்ந்தானாம்.

அந்திவந் தடைந்த தாயைக் கண்ட ஆன் கன்றின் அன்னான் (108)

இத்தகையவனைக் கைகேயி காட்டிற்கு அனுப்பிவிட்டாள்.

பிணி அவிழ்ந்தது

அப்பொழுது அலர்ந்த செந்தாமரையை வென்ற முகத்தை உடைய இராமன், தந்தையின் கட்டளையால் அரசுச் சுமையை (அரச பாரத்தை) ஏற்றுக் கொண்டான். ஆனால் பின் என்ன ஆயிற்று? காளை மாட்டுக்கு உரியவன் காளையை வண்டியில் பூட்டி ஒட்ட, கண்டவன் ஒருவன் பூட்டை அவிழ்த்துக் காளையை விடுவித்தது போல், கைகேயியின் செயலால் அரசுச் சுமையைத் துறந்தானாம்:

தெருளுடை மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி
இருளுடை உலகம் தாங்கும் இன்னனுக்கு இயைந்து நின்றான்
உருளுடைச் சகடம் பூண்ட உடையவன் உய்த்த கார் ஏறு
அருளுடை ஒருவன் நீக்க, அப்பிணி அவிழ்ந்தது ஒத்தான்

(113) .

இராமன் கரியவன் ஆதலின் கார் ஏறு ஒப்புமை யாக்கப்பட்டது. அங்கு அருளுடைய ஒருவனால் மாடு சுமை நீங்கிற்று; ஆனால் இங்கே அருள் இல்லாத கைகேயியால் சுமை நீங்கிற்று; இருப்பினும், பின்பு. சீதையை இழந்து வருந்துவதால் கைகேயியின் செய்கை அருள் உடையதாகாது.