பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208 - சுந்தர சண்முகனார்


இங்கே, இரவு ஒரு பெண்ணாக உருவகிக்கப்பட்டு உள்ளது. ஒரு பெண்ணின் கொடிய செயலால் மற்ற பெண்கட்கும் ஏற்படுவது இழிவு தானே! என இரவாகிய பெண் எண்ணி ஆடவர் முன் நிற்க நாணினவள் போல் மறைந்து விட்டாளாம். இயற்கையாக இரவு போய்ப் பொழுது புலர்கிறது. ஆனால் கம்பர் இங்கே, கைகேயியின் செயலுக்கு நாணிக் கங்குலாகிய நங்கை மறைந்ததாகத் தானாக ஒரு காரணம் குறித்தேற்றிக் கூறியுள்ளார்- இது தான் தற்குறிப்பு ஏற்றம்.

கோழியின் விளிப்பு

கைகேயியால் தயரதன் மயங்கியதற்கு வருந்தி, சிறகுகளாகிய தம் இரண்டு கைகளால் வயிற்றில் அடித்துக் கொண்டு கூவுவதுபோல் கோழிகள் கூவினவாம்.

எண்தரும் கடை சென்ற யாமம் இயம்புகின்றன, ஏழையால்
வண்டு தங்கிய தொங்கல் மார்பன் மயங்கி விம்மிய வாறெலாம்
கண்டு நெஞ்சு கலங்கி அம்சிறை யான துணைக் கரம்
கொண்டு தம் வயிறு எற்றி எற்றி விளிப்ப போன்றன கோழியே

(51)

ஏழை - கைகேயி. துணைக் கரம்= இரண்டு கைகள். எற்றுதல் = அடித்துக் கொள்ளுதல். விளித்தல் = கூவுதல். துன்பம் வந்தபோது வாயிலும் வயிற்றிலும் கைகளால் அடித்துக் கொள்வது இயல்பு என்பதை, அவர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார்கள் என்னும் உலக வழக்காற்றால் உணரலாம். விடியற். காலையில், கோழிகள் இரண்டு இறக்கைகளையும் மாறி மாறி விரித்தும் வயிற்றுப் பக்கம் அடித்துக் கொண்டும். கூவுவது இயற்கையாக நடப்பது. ஆனால், இவை, தயரதனுக்காக இரங்கி இவ்வாறு செய்வதாகக் கூறுவது. ஒருவகைத் தற்குறிப் பேற்றமாகும்.

மனத்து வைவன

நீர்நிலைகளிலும் மரங்களிலும் இரவில் தங்கியிருந்த பறவை இனங்கள், காலையில், பெண்களின் சிலம்பு,