பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 21

என்பது பாடல் பகுதி. (பஞ்சவன் = பாண்டியன்) பழியே இல்லாத பாண்டியனே வாழி என்று காவலன் குறிப்பிட்டுள்ளது, இன்னும் சிறிது நேரத்தில் பாண்டியனின் பழி வெளிப்படப் போகிறது என்பதன் குறிப்பாகும். மற்றும் இப்பகுதியில், வாழி- வாழி என்று ஆறு முறை வாழி சொல்லியிருக்கிறான். இது, இன்னும் சிறிது நேரத்தில் பாண்டியன் இறக்கப் போகிறான் என்பதின் முன்னோட்டக் குறிப்பாகும்.

நான் (சு. ச.) இப்போது சிலப்பதிகாரம் பற்றி நூல் எழுதவில்லை; கம்பராமாயணம் பற்றியே எழுது கின்றேன். சிலப்பதிகாரச் சுவைப் பித்தால் ஒரளவு கூடுதலாகவே எழுதிவிட்டேன்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல்
இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை
வெறும் புகழ்ச்சி யில்லை

(தமிழ்-2)

என்னும் சுப்பிரமணிய பாரதியாரின் கூற்றுக்கு இணங்க, இளங்கோ அடிகள் போலவே, கம்பர் தம் காப்பியத்தில் கையாண்டுள்ள முன்னோட்டச் சுவையைக் காண்போம். முன்னோட்டச் சுவை என்பது என்ன என்பதை அறிமுகம் செய்யவே இவ்வளவு பயணம் செய்ய வேண்டியதாயிற்று. இனிச் சுவை வருமாறு:

மந்தரை சூழ்ச்சிப் படலம்

இராமனைப் பயந்தவள்

உறங்கிக் கொண்டிருந்த கைகேயியைக் கூனி எழுப்பி, துன்பம் வந்துள்ள போதும் தூங்கிக் கொண்டிருக்கிறாயே என, கைகேயி பின்வருமாறு கூறினாள்: