பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அடோத்தியா காண்ட ஆழ் கடல் 25

இந்தப் பாடலில் நான்கு முன்னோட்ட அமைப்புகள் உள்ளன. தயரதன் மடங்கல் ஆளி (ஆண் சிங்கம்) போன்றவனாம். இத்தகையவன் இன்னும் சிறிது நேரத்தில் மயங்கி விழப் போகிறான். வாழிய- வாழிய எனச் சிற்றரசர்கள் வாழ்த்த வந்தானாம். இந்த 'வாழிய' என்பது, தயரதன் அண்மையில் இறக்கப் போகிறான் என்பதைப் பின்புலமாகக் கொண்டது. கைகேயியின் சொல்லுக்கு- பேச்சுக்கு இருக்கும் இனிமை தன் இசைக்கு இல்லையே என யாழ் அஞ்சக் கூடிய அளவுக்கு இன்மொழி பேசும் கைகேயி என்பது, இன்னும் சிறிது நேரத்தில் வன்மொழி பேசப் போகிறாள் என்பதன் எதிர்மறை. யாழிசை அஞ்சிய அம் சொல் ஏழை எனக் கம்பர் கூறியுள்ளார். ஏழை என்னும் சொல்லுக்கு வறியவர் என்னும் பொருளோடு பெண் என்ற பொருளும் உண்டு. இந்த ஏழை என்பது, தயரதனாலும் மகன் பரதனாலும் துறக்கப்படப் போகிறாள் என்பதன் குறியீடும் ஆகும்.

இகழ்ந்தவர் மாள்வர்


கைகேயி வருந்தியவள் போல் கீழே வீழ்ந்தாள். தயரதன் அவளை நோக்கி, ஏன் வருந்துகிறாய்? ஏழு உலகிலும் உள்ளவர்களுள் உன்னை இகழ்ந்தவர் யாராயினும் இறப்பர்; நடந்ததைச் சொல்! அதன்பின் என் செயலைக் காண்பாய் என்றான் தயரதன்.

'

அன்னது கண்ட அலங்கல் மன்னன் அஞ்சி
என்னை நிகழ்ந்தது இவ்வேழு ஞாலம் வாழ்வார் உன்னை இகழ்ந்தவர் மாள்வர் உற்ற தெல்லாம் சொன்னபின் என்செயல் காண்டி; சொல்லிடு என்றான்

(9)

உன்னை இகழ்ந்தவர் இறப்பர் என்றான் தயரதன். பின்னர் தயரதன் கைகேயியை இகழ்ந்து பேசி இறந்து விடுகிறான். பின்பு என் செயல் காண்டி என்றான். பின்பு அவன் இறந்த செயலைக் கைகேயி கண்டாள்.