பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 33


அயோத்தி சென்று இராமன் திருவடிகளில் மலர் தூவி வணங்கலாம் என்னும் ஆவல் தூண்டியதால், பரதன், நகை முகத்தோடும் மெய்ம்மயிர்ச் சிலிர்ப்போடும் பொங்கிய காதல் உடையவனானான்.

வாள் நிலா நகை தோன்ற, மயிர்ப்புறம்
பூண, வானுயர் காதலின் பொங்கினான்
தானிலாம் மலர் தூவினன் தம்முனைக்
காணலாம் என்னும் ஆசை கடாவவே

(7)

உடனே பரதன் நாளும் நேரமும் பார்க்காமல் தம்பி சத்துருக்கனனொடு தேரேறி அயோத்திக்குப் புறப்பட்டுப் போனான்.

தழுவு தேரிடைத் தம்பியொடு ஏறினான்
பொழுதும் நாளும் குறித்திலன் போயினான்

(8)

ஊருக்குப் புறப்படுபவர்கள் நல்லநாளும் அந்த நாளிலேயே நல்ல நேரமும் பார்த்துப் புறப்படுவர். இந்தப் பாடலில் நாள்' என்பது, திதி- நட்சத்திரம்ட கிழமை ஆகியவற்றை குறிக்கும் நல்ல தேதியாகும். பொழுது என்பது, இராகு காலம்- எமகண்டம் முதலியன இல்லாதனவாய் இருக்கும் நல்ல நேரம் ஆகும். ஆனால், பரதன், இராமனைக் காணவேண்டும் என்னும் ஆவலினால் நாள்- நேரம்- பாராமல் உடனே புறப்பட்டானாம். உலகியலில் நாள்தோறும் பார்க்கும் பழைய பஞ்சாங்கங்கள் கூட (மூடநம்பிக்கையினர் கூட) சாவுச் செய்தி வந்தால் நாள்- நேரம் பார்க்காமல் உடனே புறப்படுவது உண்டு. பரதனுக்கு வந்த திருமுகம் (கடிதம்) ஒரு வகையில் சாவு ஒலை போலவே ஆயிற்று. பரதன் அயோத்திக்குச் சென்று செத்த தந்தையின் உடலைத் தானே கண்டான். மிக்க பண்பாளனாகிய பரதனுக்குப் பின்னர் எல்லாம் எதிர் மாறாகவே நிகழ்ந்தன.

ஆய காதல்

இராமனைப் பிரிந்திருந்த கோசலை, தூய்மையான பரதனைக் கண்டதும் காடு சென்ற இராமனே வந்தால் அ. ஆ.-3