பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 59

என்று கூறியுள்ளார்- கொங்குவேளிர் என்னும் புலவர் பெருங்கதை என்னும் தம் நூலில், மன்னுயிர் ஞாலக்கு இன்னுயிர் ஒக்கும் இறை (உஞ்சைக் காண்டம், 11-17, 18) என்று மொழிந்துள்ளார். திருத்தக்க தேவர் தமது சீவக சிந்தாமணி என்னும் நூலில்,

மல்லலங் களிற்று மாலை வெண்குடை மன்னர் கண்டாய்
நல்லுயிர் ஞாலம் தன்னுள் நாமவேல் நம்பி என்றான்

(2908)

என்று உரைத்துள்ளார். தோலா மொழித் தேவர் என்பவர் தமது சூளாமணி நூலில்,

உலகிற்கு ஓருயிர்ப்
பெற்றியான் பயாபதி என்னும் பேருடை
வெற்றிவேல் மணிமுடி வேந்தர் வேந்தனே

(நகர-16)

எனத் தெரிவித்துள்ளார். பரஞ்சோதி முனிவர் தமது திருவிளையாடல் புராணம்- பழியஞ்சின படலத்தில்,

உலகினுக்கு உயிரா யிருந்தனன் இறைகுலோத்துங்கன்

(44)

என்று அறிவித்துள்ளார். கம்பர் கூறியிருப்பதற்கு மாறாக மற்றவர் கூற்றுகள் உள்ளன. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு யாது?

கம்பராமாயணத்திலுள்ள சூழ்நிலை வேறு. மற்ற நூல்களில், மன்னர்களாக இருப்பவர்களைப் பற்றிக் கூறியுள்ளனர். இங்கோ, இராமன் இன்னும் மன்னனாக ஆகவில்லை. தந்தை தயரதன் மன்னனாக இருக்கின்றான். இருக்கும் மன்னன் இறந்த பின்னே மைந்தன் மன்னனாக வரமுடியும். எனவே, தந்தை இருக்கும்போது இராமனை முடிசூட்டிக் கொள்ளும்படி வசிட்டர் வற்புறுத்துகிறார். அதற்காக, உடம்பு உயிரைத் தாங்கிக் காத்தல்போல், மன்னன் உலகைக் காக்க வேண்டும். அகவை முதிர்ந்து தளர்ந்து போன தயரதனால், இனி உடம்பாக இருந்து உலகாகிய உயிரைக் காக்க முடியாது- எனவே நீ