பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 63.

போது நீராட்ட, வடக்கே இமயத்திலிருந்து வரும் கங்கை நீர் முதல் தெற்கே உள்ள கன்னியாகுமரிக் கடல் நீர் வரை உள்ள பல மங்கல நீர்களும் கொணரப்பட்டனவாம். இங்கே கம்பர் தெற்குக் கோடி முதல் வடக்குக் கோடி வரை உள்ள பகுதிகளை இணைத்து இந்திய ஒருமைப்பாட்டைச் சுட்டிக் காட்டுவதுபோல் தோன்றுகிறதல்லவா? மேலும் நாலு வாரியின் நீரும் கொண்டு வந்தனராம். மற்றும், முடி சூட்டற்கு வேண்டிய முன் ஆயத்தங்கள் அனைத் தையும் வசிட்டர் செய்தாராம்.

கங்கையே முதல ஆகக் கன்னி ஈறு ஆய தீர்த்த
மங்கலப் புனலும் நாலு வாரியின் நீரும் பூரித்து அங்கியின் வினையிற்கு ஏற்ற யாவையும் அமைத்து வீரச்
சிங்க ஆசனமும் வைத்துச் செய்வன பிறவும் செய்தான்

(81)

என்பது பாடல். நாலு வாரி என்பதற்கு, நான்கு திக்குகளிலும் உள்ள கடல் எனப் பொருள் கூறப்பட்டுள்ளது. இது குழப்பமாயுள்ளது. நம் நாட்டின் (இந்தியா-தமிழ் நாடு) மூன்று திக்குகளில் கடல் உள்ளது. அவை வங்கக் கடல், அரபிக் கடல், இந்துமா கடல், என்பன. வடக்கே கடல் இல்லை. வடக்கே சீனாவும், இரஷ்யாவும் உள்ளன. இரஷ்யாவுக்கும் வடக்கே உள்ள ஆர்டிக் கடலை நாலாவது கடல் என்று கூறுவதா? ஒரு காலத்தில் இந்தியாவின் வட பகுதி கடலாயிருந்தது; பின்னர்த் தெற்கேயிருந்த குமரிக்கண்டம் (லெமூரியாக் கண்டம்) ஆழ்ந்து கடலில் மூழ்கிவிட்டதாகவும், வடக்கேயிருந்த கடல் பகுதி உயர்ந்து இமயமலை முதலிய பகுதிகள் மேலே எழுந்து விட்டதாகவும் ஒர் ஆய்வுக் கருத்து சொல்லப்பட்டுள்ளது. இது பொருத்தமெனில், இந்தியாவின் நான்கு பக்கமும் கடல் இருந்ததாகக் கொள்ளலாம்.

பூமிக்கு நானிலம் (நால் + நிலம்) என்னும் பெயர் உண்டு. கடல்களின் நடுவே உள்ள நான்கு பக்க நிலப் பகுதியைக் குறிக்கும் இந்தப் பெயர் தெளிவாயுள்ளது.