பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 77

மற்றும், தமிழ்' என்று மட்டும் கூறாமல், தமிழ் குளிர்ச்சியானது என்னும் பொருளில் தண் தமிழ் எனக் கூறியிருப்பது நமக்குக் குளிர்ச்சியாகவும் இனிமையாகவும் உள்ளது. மேலும், இந்தத் தொடர் ஆட்சியினால், கம்பரது தாய் மொழிப் பற்றும் புலனாகிறது.

வேய் முத்து

முத்து பிறக்கும் இடங்களுள் மூங்கிலும் ஒன்று என்பர். பாறையில் விழுந்து கிடக்கும் முத்துகள் செக்கர் வானில் மின்னும் உடுக்கள் போன்று இருப்பதை இராமன் சீதைக்குக் காண்பிக்கின்றான்:

தொடர்ந்த பாறையில் வேயினம் சொரி கதிர் முத்தம்
இடங்தொறும் கிடந்திமைப்பன எக்கிளம் செக்கர் படர்ந்த வானிடை தாரகை நிகர்ப்பன பாராய்!

(27)

என்பது பாடல் பகுதி.

கற்றவர் அடக்கம்

யானையையும் விழுங்கக் கூடிய பெரிய மலைப் பாம்புகள், கற்றறிந்தவர் போல் அடங்கி, முனிவர்கள் உயரமான பகுதிகளில் ஏறப் படிகளாய்க் கிடக்கின்றனவாம்.

இடிகொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்துடன் விழுங்கும்
கடிய மாசுணம் கற்று அறிந்தவர் என அடங்கிச் சடைகொள் சென்னியர் தாழ்விலர் தாம் மிதித் தேறப்
படிகளாம் எனத் தாழ்வரை கிடப்பன பாராய்!

(35)

என்பது பாடல். ஈண்டு, கற்றறிந்தவர்கள் அடக்கமாய் ஒழுகுவதுபோல், மலைப் பாம்புகள் முனிவர்கட்கு அடங்கி ஒழுகுகின்றன- என்று கூறியிருப்பது குறிப்பிடத் தக்கது. இங்கே, சீவக சிந்தாமணியில் உள்ள பாடல் ஒன்று ஒப்பு நோக்கத் தக்கது.