பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 85

கங்கை காண் படலம்

அறுபதாயிரம்

பரதனுடன் சென்ற படை அறுபதாயிரம் அக்குரோணி அளவு கொண்டதாம். அக்குரோணி = படையின் ஒரு பேரளவு. அறுபதாயிரம் என்பதைக் கம்பர், மூன்று பத்து (30) ஆயிரத்து (30x2 = 60) இரட்டி என்று பெருக்கல் கணக்கில் கூறியுள்ளார். கூட்டலின் சுருக்க எண்ணே பெருக்கல் ஆகும். பத்தை (10) ஒன்றின் கீழ் ஒன்றாக மும்முறை போட்டுக் கூட்டினால் முப்பது கிடைக்கும்; ஆயிரத்தை (1000) ஒன்றின் கீழ் ஒன்றாக முப்பது முறை போட்டுக் கூட்டினால் முப்பதாயிரம் கிடைக்கும்; முப்பது ஆயிரத்தை (30, 000) ஒன்றின் கீழ் ஒன்றாக இரண்டுமுறை போட்டுக் கூட்டினால் அறுபது ஆயிரம் (60, 000) கிடைக்கும். எனவே, கூட்டலின் சுருக்கக் குறியீடே பெருக்கல் ஆகும். பாடல்:

ஆன்றவர் உணர்த்திய அக்கு ரோணிகள்
மூன்று பத்து ஆயிரத்து இரட்டி முற்றுமே

(5)

காவிரி நாடு

கம்பர் கோசல நாட்டைக் குறிக்கும் போது, தமது தாய் நாடாகிய காவிரி நாட்டை மறந்தார் இல்லை. காவிரி நாடு போன்றதாம் கோசல நாடு. காவிரி நாடு அன்ன கழனி நாடு' என்பது பாடல் பகுதி (1).

உயிர் மருந்தா ?

பரதன் படையுடன் வருவதைப் பார்த்த குகன், இராமனைக் கொல்லத்தான் வருகிறான் எனத் தவறாக எண்ணிப் பரதனைப் பழித்து மற உரை பகர்கிறான். என் துணைவனாகிய இராமன் தவம் மேற்கொள்ள, இந்தப் பரதன் நாடாள விடுவேனா? உயிர் என்ன சாவா மருந்தா (தேவ அமிழ்தமா)? பரதனோடு போரிட்டு என் உயிரைக் கொடுத்துப் புகழ் பெறுவேன்-என்கிறான்.