பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 91

எச்சில் நுகர்வு

பல்லாண்டுகளாக நுகர்ந்து கழித்த எச்சிலை மீண்டும் நுகர்வது (அரசாள்வது) இன்பமானது அன்று என்று தயரதன் கூறுகிறான்:

..........நெடிது நாள் உண்ட
எச்சிலை நுகர்வது இன்பம் ஆகுமோ?

(25)

என்பது பாடல் பகுதி. இதேபோல் புத்தரும் கூறியது ஈண்டு நினைவைத் தூண்டுகிறது. காட்டிற்கு வந்துவிட்ட புத்தரை, அமைச்சரும் அரசவைப் புலவரும் அடைந்து, மீண்டும் வந்து அரசேற்கும்படி வேண்டினர். அதற்குப் புத்தர் கூறியது:

  • எறிந்து விட்ட எச்சிலை மீண்டும்

அருந்தி நுகர்வது அளவிலா மடமையாம்

(64,65)

பூமகள் திருமணம்

அடுத்து, தயரதன் கூறுகின்றான்: இராமன் முடி சூடிக் கொள்வதைக் கண்டு யான் மகிழ வேண்டும் என்னும் கருத்தை வேறு உருவத்தில் உரைக்கிறான். இராமன் சீதேவியை (சீதையை) மணந்து கொண்ட திருமணத்தைக் கண்டு மகிழ்ந்தேன்; அவன் பூதேவியையும் மணந்து கொள்ளும் திருமணத்தைக் காண விழைகின்றேன்- என்கிறான். பூதேவியை மணப்பது என்றால், முடிசூடிக் கொண்டு நிலத்தை (பூமியை) ஆள்வதாகும். இராமனாக வந்து பிறந்திருக்கும் திருமால் திருமகள், நிலமகள் (பூமாதேவி) ஆகிய மனைவியரை உடையவர் என்பது ஈண்டு நினைவு கூரத்தக்கது. ____________________________________________________

  • கவுதமப் புத்தர் காப்பியம்- அமைச்சரும் புலவரும்

அழைத்த காதை- சுந்தர சண்முகனார்.