பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 - சுந்தர சண்முகனார்

செய்தபேர் உவமை சால் செம்பொன் சீறடி கைகளின் தீண்டினள் காலக் கோள் அனாள்

(51)

சிலர் தண்ணிரில் இருந்துகொண்டு தவம் புரிவர்; சிலர் ஒற்றைக் காலில் நின்று தவம் புரிவர். ஆனால் தாமரை ஒன்றே இந்த இரண்டு செயல்களையும் செய்கிறதாம். தண்ணீரில் ஒற்றைக் காலுடன் (ஒரு தண்டுடன்) நின்று பெரிய தவம் புரிகிறதாம் எனவே தான், தாமரை நோற்ற நோன்பு' எனப் பொருத்தமாகக் கம்பர் அணிந்துரைத்துள்ளார். இதனால் தாமரைக்கு “மாதவம் புரிவாள்' என்னும் பெயரும் உண்டு.

இரக்கம் இன்மையின் நன்மை

தயரதன் எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் கைகேயிக்கு இரக்கம் இல்லாது போனதால், இராமன் காட்டுக்குப் போக நேர்ந்தது. இதை அறிவிப்பதில் கம்பர் ஒரு புதுமையைக் கையாண்டுள்ளார். அதாவது:- கைகேயிக்கு இரக்கம் இல்லாததால் ஒரு பெரிய நன்மை ஏற்பட்டதாம். அதாவது, கைகேயிக்கு இரக்கம் இல்லாததால் இராமன் காட்டிற்குப் போக நேர்ந்தது. அதனால் இராமனது சிறந்த பண்புகள் வெளிப்பட்டன. அதனால் பெரும் புகழ் உண்டாயிற்று. அந்தப் புகழ் என்னும் அமிழ்தத்தை உலகம் பருகுகின்றது- என்று கம்பர் பாடியுள்ளார். பாடல்:

அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க நல்லருள் துறந்தனள் தூமொழி மடமான்
இரக்கம் இன்மை அன்றோ இன்று இவ்வுலகங்கள் இராமன்
பரக்கும் தொல் புகழ் அமுதினைப் பருகுகின் றதுவே (86)

_________________________________________________ 'மாதவம் புரிவாள்' என்பதன் விரிவான விளக்கத்தை எனது 'மாதவம் புரிவாள்' என்னும், நூலில் காணலாம்.