பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


பாட்டெழுத ஆரம்பித்தவனை நோட்டம் சொன்னவர்கள் - தமிழ் நாட்டில் ஏராளம் பேர் இருந்தார்கள் - இருக்கிறார்கள்!

அவர்களுக்கு என்ன தெரியும்! - பாரதியாரது எட்டையபுரத்து வாழ்க்கையைப் பற்றி?

அவரது தந்தையார் கணக்கிலே வல்லவர் - வட நாட்டு திலகரின் தந்தையாரைப்போல !

திலகர்கூடக் கணக்கிலே எதிரியைத் திணறடிக்கும் திண்மை பெற்றவர்! பாரதியாருக்குக் கணக்கு என்றாலே எட்டிக்காய்!

அவர் தந்தை, கணக்கென்று வாயெடுத்தாலே போதும். உடனே பாரதியார், தந்தையின் சிந்தனை ஒட்டத்தைச் சிதறடிக்க, கணக்கு, பிணக்கு, மணக்கு, ஆமணக்கு என்பார்!

'ஏன் விழிக்கிறாய்? என்று, கோவைக் கண்ணோடு பாரதியார் தந்தை நெருப்புதறக் கேட்பார்.

உடனே, தாழ்ந்த குரலோடு, "விழி, கழி, சுழி, வழி, குழி, பழி, இழி, பிழி" என்று பாரதியார் வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே பேசுவார்!

அவரை அடிப்பதா - அணைப்பதா என்று அவரது தந்தை திணறுவார்' சில வேளைகளில் அவர் போக்கு கண்டும் சிரித்தும் விடுவார்!

கவிதைக்குச் சொல்லடுக்குவது - பாரதியாரது இளமைக் காலப் பைத்தியம்! அறிவின் அலைச்சல்!

இந்த ஞானக் கிறுக்குதான். பிற்காலத்திலே அவரை விடுதலைக் குயில் பாரதியாராக மாற்றியது!

'செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே' என்று அவர் எழுதிய பாடலுக்கு - அப்போது எவ்வளவு எதிர்ப்பு தெரியுமா?

காதிலே தேன் பாய்ந்தால்,ஈ, எறும்பெல்லாம் உள்ளே புகுந்து மொய்க்காதா? பிறகு அறுவை சிகிச்சைதானே செய்ய வேண்டும்?

ஞான ஆணவங்கள் சில, இப்படியும் இடித்துக் கேட்டன. இதற்கெலாம் பதில் கூற ஆரம்பித்தால்.அவரால் பாட்டெழுத முடியுமா?

98