பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


"அண்ணா நீ வாய் திறந்தாய், கொட்டின முத்துக்கள் சிதறின வைரங்கள்! எல்லாம் மரகதக் குப்பைகள். வந்தவன் ஒவ்வொருவனும், அந்த விலைமதிக்க முடியாத மணிகளை மனக் கூடையிலே வாரிக் கொண்டு, போயினன். எஞ்சியிருப்பது ஒரே ஒரு முத்து. அந்த முத்தை நாடி நான் நெருங்க ஆரம்பித்தேன். அது என்னருகிலேயே இருந்தது. அந்த முத்திலே ‘கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு' என்ற சொல்லோவியங்கள் எழுதப்பட்டிருந்தன" என்பது கலைமணியின் உள்ளத்தின் ஆழத்தே இருந்து வெளிப்படும் உயிர்ப்பான எண்ணம்!

ஆட்சிமுறை எப்படி அமைய வேண்டும் என்பதை இயற்கை கொண்டு புலவர் கலைமணி விளக்கியிருப்பது எண்ணியெண்ணி உள்ளத்தில் இருத்திக் கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

இன்றைய மக்களாட்சியில் பெரும்பான்மை பலம் கொண்ட கட்சி நாட்டை ஆள்கிறது. சிறுபான்மைக் கட்சிகள் எதிர்க்கட்சிகளாக உள்ள்ன்,இயற்கைக் குடியரசில் சிறு பான்மைக் கட்சி ஆட்சி செய்கிறது. பெரும்பான்மைக் கட்சி ஆட்சி செய்வோரைக் கண்காணித்து வருகிறது. ஆம்! உலகில் நிலப்பரப்பு குறைவு. கடற் பரப்போ மிகுதி எதிர்க் கட்சியைப் போலுள்ள பூமிதான் மக்களை ஆட்சி புரிகிறது. சிறு பான்மைக்குச் சிறப்பான தகுதியை வழங்கியதோடு பெரும் பான்மை நின்று விடவில்லை: "பூமியே! நீ கொடுங்கோலை ஏந்தினால், புரண்டு வரும் கடலலைகளால் உன்னைப் புதை குழிக்கு அனுப்புவேன். எச்சரிக்கை” என ஓயாமல் குரல் கொடுத்து வருகிறது. இயற்கையின் இந்தக் குடியாட்சி முறை நாட்டில் நடைமுறைக்கு வரக் கூடாதா? என நெஞ்சம் ஏங்குகிறது. புலவர் கலைமணி அவர்களுடைய உரைநடையே கவிதை நடையாகச் சிறந்துள்ளது. எடுத்துச் சொல்லும் முறையிலே ஒரு புதிய போக்கு நெஞ்சில் நிற்கத்தக்கவாறு தக்க எடுத்துக்காட்டுக்கள்-இவை நூல் முழுவதும் பளிச்சிடுகின்றன. சான்றுக்குச் சில -

"மழைத் தோலால் நெய்யப்பட்ட பனித் திரையைக் கதிர வனுடைய கூரிட்டிகள் ஊடுறுவின.அதன் விளைவு?வானவில் வண்ணங் காட்டி மேற்கில் சிரித்தது."-இது ஓவிய நடை.

15