பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56


ஒன்றையும் தனக்கெனத் தேடிக் கொள்ளாப் பண்பும், பல்வேறு நாடுகளிலே செல்வாக்கும் கொண்டிருந்தஜோசப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஆதிக்கபுரிபோய்ச் சேரலாம் என்று ரிஷ்லு திட்டமிட்டான். இருவருக்கும் ஏற்பட்ட கூட்டுறவு, ரிஷ்லுவுக்குப் பெரும் பயனளித்தது--ஜோசப் இறந்துபடும் வரையில், ரிஷ்லுவுக்காகவே, உழைத்தார். ரிஷ்லுவின் மனமறிந்து திறமையுடன் காரியமாற்றினார். ரிஷ்லு அரசாளும் காலத்திலே பெற்ற பல ஆச்சரியமான வெற்றிகளுக்கு ஜோசப்பின் அறிவாற்றல், பெரியதோர் காரணமாக அமைந்தது.

ஜோசப்பின் செல்வாக்கினால், அரண்மனையில் கூட, ரிஷ்லுவிடம் இருந்த அவநம்பிக்கையும் பயமும் ஓரளவு குறைந்தது.

ரிஷ்லுவுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

மேரி தன் நிலையில் திருப்தி பெறமுடியுமா? அரண்மனையில் எல்லா அதிகாரங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்த அம்மை, லைனிஸ் என்னும் ஊர்பேர் அறியாதான் அரசாண்டு கொண்டிருப்பது கண்டு எங்ஙனம் மனம் பொறுக்க முடியும். சூழ்ச்சிகள் மூலம் மீண்டும் இழந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆவல் வளர்ந்த வண்ணம் இருந்தது.

மகனுக்கும் அன்னைக்கும் இடையே இயற்கையாக இருந்து வந்த பாசம், லைனிசால் கெட்டுவிட்டது.

ஆன் அரசி எப்போதும் போலவே, கண்ணீர் உகுத்துக் கொண்டுதான் இருந்தாள்.

பிரபுக்கள், இந்தப் 'புதிய நோய்' போக மருந்து உண்டா என்று ஏக்கத்துடன் கேட்டனர்.

"சரக்கு மாறவில்லை--விலாசம்தான் புதிது!" என்று ஒருவர், லைனிசின் ஆட்சியைக் குறிப்பிட்டார்.

கான்சினி, காண்டி, இவர்களிடம் காணப்பட்ட போக்கே லைனிசிடமும் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/56&oldid=1549038" இலிருந்து மீள்விக்கப்பட்டது