பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59


மத அதிபர் உடை! நோயும் ஓயாத உழைப்பும், தாங்கித் தாங்கி முகத்திலே, வேதனை ரேகை நன்றாகப் படர்ந்திருந்தது. எனினும், ரிஷ்லுவுக்கு யாருடைய கவனத்தையும் தன் பக்கம் இழுக்கவல்ல முக அமைப்பு இருந்தது! கவர்ச்சி அல்ல! அளவளாவலாம், தோழமை கொள்ளலாம், என்ற ஆசை எழவில்லை, எனினும், அவனைப் பார்த்ததும், மனதிலே பதிந்து விடுகிறான். இத்தாலிய சாணக்கியன் மாக்கியவல்லி கூறினான், "மன்னன், நேசிக்கப்படத் தக்கவனாக இருப்பதைக் காட்டிலும் அச்சமூட்டத் தக்கவனாக இருப்பது நல்லது" என்று. ரிஷ்லு, அந்த ஓவியமாக விளங்கினான். நேசிக்க அல்ல; ஆவலைக் அச்சம் கொண்டிட வைத்தது, ரிஷ்லுவின் தோற்றம். அவனுடைய கண்களே, கருவூலங்கள்! ஒளி, ஆவலைக் காட்டுவதாக மட்டுமல்ல, உறுதியை, நினைத்ததைச் சாதித்தே தீருவான் என்ற உறுதியை உமிழ்ந்தது? ஆடம்பரம் இல்லை, உடையில், நடையில். ஆனால் அதிகாரத்தைத் திறம்பட நடத்தும் போக்கினன் என்பதை எடுத்துக் காட்டுவதாக இருந்தது.

இந்த ரிஷ்லுவிடம், மயக்கமா, மேரி அம்மைக்கு!

உண்டு, என்கிறார்கள்--இருக்கக்கூடும், அம்மையின் இயல்பைக் கவனித்தால்!

ரிஷ்லு, இதற்கு இணங்கினதாக ஆதாரமும் இல்லை, நடவடிக்கைகள் இவ்வகையில் ஏதும் இல்லை.

பொதுவாகவே ரிஷ்லுவுக்கு அந்தச் 'சபலம்'கிடையாது. நோயும், நோயைவிடக் கடுமையாக மனதைப் பிடித்துக் கொண்டிருந்த ஆதிக்க நோக்கமும், ரிஷ்லுவுக்கு அந்தச் சபலத்தைத் தந்திராது--மேலும் வாலிப வயது முதல் தேவாலயத்திலே அல்லவா, வேலை!! எனவே, ரிஷ்லு, விருந்து தேடிடும் வீணனாக இல்லை. ஆனால், மேரி, அம்மைக்கு ஏதோ ஒருவகையான மயக்கம் இருப்பது மட்டும் ரிஷ்லுவுக்குத் தெரிந்தது--அந்தப் பொல்லாத குணம் கூடாது என்று ரிஷ்லு உபதேசம் செய்யவில்லை, ஒதுங்கிக் கொள்ளவில்லை. அரண்மனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/59&oldid=1549041" இலிருந்து மீள்விக்கப்பட்டது