பக்கம்:அரசியர் மூவர்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 ☐ அரசியர் மூவர்



சென்ற பாடலிற் கண்டோம். வாழ்நாள் முழுவதும் ஒன்றை எதிர்பார்த்து நிற்க, இறுதியாக அது நடைபெற்றுவிட்டது என்று மகிழ்ந்து நிற்கும் வேளையில் அது தடைபட்டுவிட்டது என்று அறிந்தால், ஒரு தாய்மனம் என்ன பாடுபடும் என்பதைக் கூறவும் வேண்டுமோ? அவள் எதிர்பார்த்து அஞ்சிய ஒன்று நடந்தேவிட்டது. ஆனால், அஞ்சத் தக்க ஒன்று நடைபெற்றுவிட்டால், உலகில் உள்ள மக்கள் அவரவர்கள் பண்பாட்டிற்கு ஏற்ப மனம் மாறுபடுவார்கள். பண்பாட்டின் முடியாய் விளங்குகிற கோசலை இதனைக் கேட்டுப் பெரு வருத்தம் அடைந்தனளாயினும், அதனைக் காட்டிக் கொள்ள வில்லை. மேலும், அவளால் முற்றிலும் அன்பு செய்யப்பட்டவனே யாவான் பரதனும். இந்நிலையில் அவள் கூறுஞ்சொற்கள் அவள் பண்பாட்டை நமக்கு அறிவுறுத்துகின்றன. இதோ கோசலை பேசுகிறாள்.

"முறைமை அன்றுஎன்பது ஒன்று உண்டு; அதல்லது
நிறைகு ணத்தவன் நின்னினும் நல்லனல் ;
குறைவு இலன்,' எனக் கூறினள் நால்வர்க்கும்
மறுஇல் அன்பினில் வேற்றுமை மாற்றினள்.”
(1609)


'இவ்வாறு செய்வதுமுறைமை அன்று என்பது தவிரப் பரதன் உன்னைவிட நல்லவன்,' என்று கூறினாள் நால்வரிடத்தும் ஒரே வகையான அன்புடைய கோசலை.

இதுவே கவிஞன் கோசலையைப் பற்றிக் கூறும் முடிபு. இவ் வாறு அவளைப் பற்றிச் கூறியது எவ்வளவு பொருத்தமுடையது என்பதை அடுத்து வரும் அவளுடைய சொற்கள் காட்டுகின்றன.

“என்று பின்னரும், 'மன்னவன் ஏவியது
அன்று எனாமை மகனே! உனக்கு அறம் ;
நன்று நும்பிக்கு நானிலம் நீகொடுத்து
ஒன்றி வாழுதி ஊழி பல,' என்றாள்.” (1610)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/100&oldid=1496793" இலிருந்து மீள்விக்கப்பட்டது