பக்கம்:அரசியர் மூவர்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல்தேவி கோசலை ☐ 103



தசரதன் இராமன்மேற்கொண்ட அன்புகூடப் பொய்யோ என்ற ஐயம் அவள் மனத்தில் தோன்றுகிறது. முதல்நாள் அவனாகக் கூப்பிட்டு 'இவ்வரசை நீ ஏற்றுக்கொள், என்று ஏன் கூறவேண்டும்? இன்று, 'உடனே நீ காடு செல்,' என்று ஏன் கூறவேண்டும்? கோசலைக்கு ஒன்றுமே விளங்கவில்லை. தசரதனுடைய நல்லெண்ணத்திற்கூட ஐயம் தோன்றிவிட்டது அத்தாய்க்கு. தான் பெற்ற பிள்ளைக்கே வஞ்சம் இழைத்துவிட்டானோ தந்தை என்று கேட்கிறாள். இராமனைக் காடு அனுப்ப ஒரு காரணம் வேண்டித்தான் முடி தருகிறேன்,' என்று கூறினானா? தசரதன் உண்மை நிலையை அவள் எவ்வாறு அறிய முடியும்? மகனே தந்தையின் ஆணை என்று கூறிய பிறகு அதில் ஜயங்கொள்ள வேண்டிய இன்றியமையாமை ஏது? எவ்வளவு ஆராய்ந்தாலும் மன்னவன் செயலுக்குக் காரணம் கான முடியவில்லை அக்காரிகையால். இராமன் அருங்குண விசேடத்தை நன்கு அறிந்திருந்தும், அவன் தவறு என்பதைக் கனவிலும் கருதாதவன் என்பதை நன்கு அறிந்திருந்தும், "அன்பு இழைத்த மனத்து அரசற்கு நீ என் பிழைத்தது?’ (1617) (உன்பால் கழி பெருங்காதல் உடைய அரசனுக்கு நீ யாது பிழை செய்தாய் மகனே) என்று கூடக் கேட்டுவிடுகிறாள் கோசலை. இவ்வஞ்சத்தக்க நிகழ்ச்சி நடைபெற யார் காரணம் என்பதை நினைத்துப் பார்க்கிறாள் கோசலை. தசரதன் இராமன்மேற்கொண்டுள்ள அன்பையும் அவள் அறிவாள் ; இராமன் தவறு இழைக்காதவன் என்பதையும் நன்கு அறிவாள். எனவே, முதலில் அரசன் செய்தது வஞ்சமோ என்று கோசலை அதனை ஒத்துக்கொள்ள மறுத்து, 'மகனே தவறு இழைத் தாயோ? என்று வெம்புகிறாள். தசரதன் இராமன்மேல் கொண்டுள்ள காதலை நன்கு அறிவாள் ஆகலின், தசரதன் வாயால் இவ்வாறு கூறியிருக்கமாட்டான் என்றே கருதுகிறாள். ஆனால், அரசனே கூறினான் என்பது ஐயமறத் தெரிந்துவிட்டது. எனவே, அவன் அவ்வாறு கூறக் காரணத்தை ஆராய்கிறது தாய் மனம். ஒரு வேளை மகன்தான் பொறுத்தற்கு அரிய பிழையைச் செய்துவிட்டானோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/105&oldid=1496903" இலிருந்து மீள்விக்கப்பட்டது