பக்கம்:அரசியர் மூவர்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல்தேவி கோசலை ☐ 107



மாட்டாமல் திகைப்பெய்திவிட்டாள்! இத்திகைப்பைக் கண்ணுற்ற இராமன், “சித்தம் நீ திகைக்கின்றது என்?” என்றும், "பதினான்கு ஆண்டுகளும் பதினான்கு பகல்கள் தாமே?” என்றும் கூறி, அப்பிரிவின் கொடுமையைக் குறைக்க முயல்கிறான். அப்பதினான்கு ஆண்டுகளிலும் தான் வனத்திடைத் தங்கி அரிய தவங்கள் செய்து, முனிவர்களுடைய நட்பையும் ஆசியையும் பெற்று வரப்போவதாகவும் அவன் கூறுகிறான். இவ்வாறு கூற ஒரு காரணம் உண்டு. எந்தத் தாய்தான் தன் மகன் பெறப்போகும் நற்பேறுகளை வேண்டா என்று மறுப்பவள்? மகன் நல்ல நிலை அடைய அதனால் சிறிது தனக்குத் துன்பம் வரினும் தாய் அதனை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளத்தானே செய்வாள்? சிறந்த தாயிடம் காணப்படும் இவ்விலக்கணத்திற்குக் கோசலை மட்டும் விலக்காமாறு எங்ஙணம்?

அறவழி வாழ்க்கை

அறம் மிகவும் கடுமையானது. அதனைக் கடைப்பிடிப்பவர் இன்பமாக வாழ்வது கடினம். அடுத்த உலகில் அவர்கள் பெறப் போகும் பயனைக் கருதி இவ்வுலகில் வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ள உறுதி பூண்டவர்களே அறத்தை விடாமல் இறுதி வரை கடைப்பிடிக்க முடியும்.

அறத்தைப் போற்றுபவர் இரு வகையினர். ஒரு வகையார், மறு உலகத்தில் பெறப்போகும் பயன் கருதியே இவ்வுலகத்தில் அதனை ஏற்று வாழ்கின்றனர். இவர்களும் ஒருவகையில் வணிகர்களே.

இன்னும் ஒரு வகையார் இவ்வாறு பயன் கருதி அறவழி நடப்பதில்லை. அறத்தை, அறத்துக்காகவே மேற்கொள்பவர்கள் இவர்கள். இவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாயினும், உலகிற்கு உயிர் போன்றவர்கள் இவர்களே.

இராமன் இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவன். அவன் அறவழி நடக்கையில் விருப்பு வெறுப்புகட்கு ஆளாகவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/109&oldid=1496918" இலிருந்து மீள்விக்கப்பட்டது