பக்கம்:அரசியர் மூவர்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116 ☐ அரசியர் மூவர்



“பொய்மையும் வாய்மை இடத்த புரைதிர்ந்த
நன்மை பயக்கும் எனின்.” (குறள். 292)

என்ற குறளை வாழ்க்கையில் செய்து காட்டுகிறாள் அப்பெண்ணரசி. வாராத இராமனை வந்தாலும் வருவான் என்று கூறுவது பொய்யேயாயினும், அதனால் கணவனுடைய துயரத்தை ஒரளவு குறைக்க முற்படும் அக்கற்புடைய மங்கையின் திண்மையை என்என்று போற்றுவது! எவ்வாறாயினும் கணவனுடைய உயிரை இழுத்துப் பிடிக்க முயலும் கோசலையின் பெருமுயற்சியைக் கண்டு நாம் வியவாமல் இருக்க முடியாது. அவள் செய்யும் முயற்சியின் அடிப்படையில் எத்துணைப் பெரிய தியாகம் மறைந்து கிடக்கிறது என்பதையும் அறிதல் வேண்டும்.

அரசனுக்கு அமைதி கூறும் ஒவ்வொரு வினாடியிலும் அவளிடத்தே அடங்கியுள்ள தாயன்பு வாள்கொண்டு அவள் மனத் தைப் பிளக்கிறது. அதனைத் தாய்க்கே உரிய மனநிலையில் பொறுத்துக் கொண்டு அவள் கணவனுக்குத் தேறுதல் கூறுகிறாள். பழைய கிரேக்கக் கதைகளில் வரும் தாய்மார்கள் கடமையை நிறைவேற்றவேண்டிமகன் அன்பைத் துறத்தல் போலக் கோசலையும் செய்கிறாள். எனவே, இலக்கியத்திலும் அதன் மூலம் நம்மனத்திலும் அழியா இடம் பெற்றுவிடுகிறாள்.

கோசலையால் மனம் தேற்றப்பெற்ற மன்னவன், அவளுக்குப் பழைய வரலாறு ஒன்றைக் கூறுமுகமாக ஓர் உண்மையை வெளி யிடுகிறான்:'புத்திர சோகம்' என்ற மைந்தரால் வரும் துன்பத்திற்குத் தான் பலியாகி உயிர்விடப் போவதை அறிவிக்கிறான். முன்னர்த் தனக்கு ஏற்பட்ட சாபம் ஒன்றை அவளுக்குக் கூறித் தான் இராமன் பிரிவால் உயிர்விடப்போவது திண்ணம் என்று எடுத்துக் கூறுகிறான்.

"அந்த முனிசொற்றமையின் அண்ணல் வனம்ஏகுதலும்
எம்தம் உயிர்வீ குதலும் இறையும் தவறாது.என்றான்."
(1692)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/118&oldid=1496804" இலிருந்து மீள்விக்கப்பட்டது