பக்கம்:அரசியர் மூவர்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118 ☐ அரசியர் மூவர்


 கைகேயி முயன்றதை அவள் நம்ப முடியும். ஆனால், இராமனைக் காட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கைகேயி ஏன் நினைக்க வேண்டும்? அரசைப் பறிகொடுத்த இராமன் நாட்டில் இருந்தால் கலகம் விளைப்பான் என்ற கருத்துடையவரே இராமனை வெருட்ட முடிவு செய்திருப்பர். இவ்வாறு முடிவு செய்ய ஒரு பெண்ணால் இயலுமா? அதிலும், தான் அன்புடன் வளர்த்த மகனை வெருட்ட எந்தத் தாய்தான் விரும்புவாள்? எனவே, இராமனைக் காட்டுக்கு அனுப்பச் சூழ்ச்சி செய்தது கைகேயியின் செயலாய் இருக்க முடியாது என நம்பிய கோசலை , அடுத்து யாரை ஐயுற முடியும்? இராமனுடைய அரசையார் பெற்றுக்கொள்கிறானோஅவன்தானே இராமனை நாடு கடத்தவும் விரும்பி இருத்தல் கூடும்? தருக்க முறைக்கும் இது அடுத்ததுதானே? ஆதலால், கோசலை இது பரதனுடைய சூழ்ச்சி என்று நினைத்ததில் தவறு ஒன்றும் இல்லை.

எல்லை மீறிய தாயன்பு

அவ்வாறு இராமனைப் பெற்ற தாயாகிய கோசலை நினைத்த தில் பெருந்தவறு இல்லை என்றாலும், ஆழ்ந்து நோக்கின், அதில் ஒரளவு தவறு உள்ளது என்பது விளங்காமற் போகாது. பரதனை ஆதியிலிருந்து வளர்த்த கோசலை அவனைப்பற்றி நன்கு தெரிந்து கொண்டிருக்க வேண்டும் அறிவால் மிக்க கோசலை பரதனை நன்கு அறிந்துகொள்ளவில்லை எனில், இதுகொண்டு அவளது அறிவைக் குறை கூறல் இயலாது. ஆனால், அவள் கொண்ட இந்த முடிவு தவறு என்பதிலும் ஐயமில்லை. அவ்வாறாயின், குறை எங்குளது? அவளுடைய தாய்மைதான் இக்குறைபாட்டை ஏற்படுத்தியது. எல்லை மீறிய தாயன்பு காரணமாகவே அவள் பரதனுக்கு இத்தவற்றைச் செய்துவிட்டாள். . தாயிடம் தங்கியிருக்க விரும்பாத பரதன், கோசலையிடம் வந்து வீழ்ந்து அவள் பாதங்களைப் பிடித்துக்கொண்டு பலபடியாகப் புலம்புகிறான்; கேகயத்திலிருந்து தான் மீண்டது 'இம்மறுக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/120&oldid=1496808" இலிருந்து மீள்விக்கப்பட்டது